அறுபது ஆண்டுகாலம் மூன்று தலைமுறையுடன் பத்திரிக்கை உலகில் பணியாற்றிய ஆசிரியர் ஆர். கே கே என அன்புடன் அழைக்கப்பட்ட குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் [87] காலமானார்.
பத்திரிகை உலகில் புதிய உரை நடையை அறிமுகப்படுத்தியதில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. பத்திரிகை உலகின் ஜாம்பவானான காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகத்தின் வலதுகரமாக நான்கு தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றிய இவர், ‘சுதந்திரன்’, ‘வீரகேசரி’ பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், ‘தினபதி’, ‘சிந்தாமணி’, ‘சூடாமணி’ பத்திரிகைகளின் பிரதி ஆசிரியராகவும் ‘சுடர்ஒளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்அவரின் நிழலாக செயற்பட்டவர். கண்டிப்பு நேர்மை என்பனவற்றின் மூலம் பத்திரிக்கை உலகில் தனக்கென ஒரு வழியைப்பின்பற்றியவர்.
எஸ்.டி.சிவநாயகத்தைப்போன்று ஊடக வெளிச்சம் தன்மீது படாமல் பாதுகாத்தவர்.. உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார்.
பத்திரிகையாளர்களை திருப்திப்படுத்துபவர்கள் இவரை நெருங்கமுடியாது. பட்டம் பதவி என்பனவற்றைத் தேடிப்போகதவர். புதியவர்களுக்கு செய்தி எழுதும் நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து முன்னேற்றியவர். வெறும் தலையாட்டிப்பொம்மையாக இருக்காது பத்திரிகையின் தரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். செய்தியை எழுதிவிட்டு இவரிடம் கொடுப்பவர்கள் நெருப்புச்சட்டியின் மீது நிற்பது போல தவிப்பார்கள்.
பலசந்தேகங்களைக்கேட்டு அவற்றுக்கு சரியான பதிலளித்தால்தான் அச்செய்தியைப்பிரசுரிக்க அனுமதிப்பார். செய்தியின் தரம் முக்கியமாக இருக்கும் அதேவேளை தவறான செய்தி பிரசுரிக்கப்படக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். கொழும்பில் தமிழ் மக்கள்மீது கெடுபிடிகள் அதிகரித்தபோது சுடர் ஒளி வெளியானது. சிங்கத்தின் கோட்டையில் புலிப்பாச்ச;லுடன் வெளியான சுடர் ஒளியின் மீது அரசாங்கம் ஒருகண் வைத்திருந்தது.
அச்சுறுத்தல்கள்,தாக்குதல்கள் என்பனவற்றை துணிவுடன் எதிர்நோக்கி சுடர் ஒளியை உன்னத நிலைக்கு கொண்டுவந்ததில் இவரது பங்களிப்பு மிகமுக்கியமானது. இலங்கையில் .ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்பட்டபோது தலைநகரில் துணிச்சலுடன் பணியாற்றியவர்.
பத்மசீலன்,சிவகுருநாதன்,டேவிட்,வித்தியாதரன்,இரா.புத்திரசிகாமணி போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் தெய்வீகன்,வாசிங்டன்,தினேஷ் போன்ற இளைஞ்ர்களும் இவருக்கு பக்க பலமாக இருந்தனர்.
சுடர் ஒளி ஜனவரி 13,2016