கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சர்வதேச தொழுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற பல்தரப்பு அரங்கம் புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வளவாளர்களாக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தோல் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஐ.எல் மாஹில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியர் எம் ஏ சி எம் பஸால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்தியத்தின் தொழுநோய் தொடர்பான புள்ளி விபரங்களை பொது சுகாதார பரிசோதகர் திரு ஜீ. சுகந்தன் முன்வைத்தார்.
நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய ஏலியன்ஸ் அபிவிருத்தி நிதியம் (Alliance Development Trust) நிறுவனத்தின் பணிப்பாளர் ரகு பாலச்சந்திரன் தமது நிறுவனம் தொடர்பில் உரையாற்றினார் பின்னர் எதிர்காலத்திலும் தொழுநோயை கல்முனை பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆலோசனைகளும் அபிப்ராயங்களும் குறித்த நிகழ்வின்போது கேட்டறியப்பட்டதுடன் திருமதி சான் அருளாநந்தம் அவர்களினால் தொழுநோய் தொடர்பில் விசேட உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித், பணிமனையின் பிரிவுத்தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், பொது சகாதார பரிசோதகர்கள், மத நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.