மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், வாழைச்சேனை, வாகரை, ஆரையம்பதி மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது சந்திவெளி – திகிலிவெட்டை படகு பாதையில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த படகு பாதையை மக்கள் பாவனைக்காக திருத்தியமைத்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உணர்த்தியதுடன்,இவ்வாறாக போக்குவரக்கு பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்து பஸ் சேவையினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அபிவிருத்திக்குழு தலைவர் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை போக்குவரத்து சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதனால் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தலாம் என்பதை உணர்த்தி இராஜாங்க அமைச்சர் இத்திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தி பொதுமக்களின் சிரமத்தை குறைக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு போக்குவரத்து சபையின் முகாமையாளர், வாழைச்சேனை போக்குவரத்து சபையின் முகமையாளர், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜ், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!
