Sunday, November 24, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக நுழைவு மைய அங்குரார்ப்பணம்

Must read

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக அணுகல் மையத்தை தாபிப்பதற்கான நிகழ்வு 30.03.2023ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் மாணவர் செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது. 
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இன்ஸ்பெயார் (InSPIRE) செயற்றிட்டத்தின் முகாமையாளர் திருமதி. சந்துல கும்புக்ககே தலைமையிலான குழுவினர், பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர், பதில் நிதியாளர், சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்,  கலை கலாசார பீட சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்; என பலரும் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்வின் வரவேற்புரை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தனது வரவேற்புரையில் ஹெல்விடாஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் தமது பீட மாணவர்களின் அறிவு மற்றும் திறன் விருத்தியில் கணிசமானளவு பங்களிப்பு செய்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன் பல்கலைக்கழக இளங்கலைப்பட்டதாரி மற்றும் இதழியல் டிப்ளோமா மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஊடகம் மற்றும் இதழியல் தொடர்பான கற்கைகளை உள்ளடக்குவதற்கு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளமை தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பீடத்தின் மொழித்துறை, அரசியல் விஞ்ஞானத் துறை, மற்றும் சமூகவியல் துறையின் பாடத்திட்டங்கள் இதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெயார் செயற்றிட்டத்தின் முகாமையாளர் திருமதி. சந்துல கும்புக்ககே, ஹெல்விடாஸ் (HELVETAS) நிறுவனம் மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுப்பதற்கான காரணங்கள் குறித்தும் எமது பீட மாணவர்களின் வினைத்திறனான பங்குபற்றல் குறித்தும் உரையாற்றினார். 
தொடர்ந்து பிரதம அதிதி உரை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. 
உபவேந்தர் தனது உரையில் மாணவர்களின் திறன் விருத்தியில் குறித்த நிறுவனத்தின் பங்களிப்புக்களை பாராட்டியதுடன் பல்கலைக்கழக சமூகம் குறித்த செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ந்தும் ஹெல்விடாஸ் (HELVETAS) நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார். நிகழ்வின் நன்றியுரையினை கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.டி. அஸ்ஹர் வழங்கினார்.
இந்நிகழ்வில் இன்ஸ்பெயார் செயற்றிட்டத்தின் கீழ் ஹெல்விடாஸ் (HELVETAS) நிறுவனத்தினால் 1.5 மில்லியன் பெறுமதியான ஊடக உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் அதற்கான உடன்படிக்கையொன்றும் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியரியர் அபூபக்கர் றமீஸ் மற்றும் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி. சந்துல கும்புக்ககே ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article