Thursday, November 21, 2024

யாழ். முதல்வர் தெரிவு இழுபறிக்கு தமிழரசுக் கட்சி கோஸ்டி பூசல்களே காரணம் – ஈ.பி.டி.பி ரங்கன்

Must read

யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதற்கு தமிழரசுக் கட்சியின் அசமந்தப் போக்கு அல்லது அக்கறையின்மை போன்றவையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீங்கேஸ்வரன் அது தொடர்பில் அவர்கள் எமது தலைமையுடன் உரிய பொறிமுறையுடன் கையாண்டிருந்தால் நிச்சயம் சாதகமான சூழ்நிலை உருவாக வாய்ப்பிருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் (13) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகள் கூறிவருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுக்கும் யாழ் மாநகரசபையில் அதிக ஆசனங்களை கொண்டள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களின் மீது அக்கறை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த உட்பூசல்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சியின் பிடிக்குள் இருந்த கட்சிகள் இன்று தனித்தனியாக சென்றுள்ள நிலையில் அவர்களுக்குள் ஒருமித்த தெரிவு இருந்திருக்கவில்லை.

மாநகரின் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் எமது கட்சியுடன் அதிகார மட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானமோ பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியோக ஆலோசகருடன் தமது தெரிவான ஒருவரது பெயரை கூறி ஆதரிக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே பேசியிருந்தார்.

எமது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கூறிவருது போல மக்களின் நலன்கருதியதாக உள்ளூராட்சி மன்றங்களை யார் ஆட்சி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்ல ஆதரவு கொடுத்துவந்திருந்தோம்.

ஆனால் யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் கோஸ்டி பூசல்களே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நம்பிக்கையும் இவர்களது இவ்வாறான அரசியல் நாகரிகமற்ற கூட்டுச் சுயநலன்களால் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது என தெரிவித்த ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் முறைப்படி எமது தலைமையுடன் பேசியிருந்தால் யாழ் மாநகரின் முதல்வர் தெரிவில் இவ்வாறான இழுபறிநிலை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article