அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை அறுவடையை அண்மித்துள்ளதால் விவசாயிகள் தாம் அறுவடை செய்த நெல்லை உலறவிட போதிய இடமில்லாமல் திணறிக்கொண்டிருப்பதையும், வீதிகளில் நெல்லை காய வைத்திருப்பதையும் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காலநிலை சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற கஸ்டங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தமது அறுவடையினை மேற்கொண்டு கிடைத்த நெல்லினை வீதிகளிலும், பொது இடங்களிலும் காய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பொறுமை காத்து ஒத்துழைப்பு வழங்குமாறு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் பொதுமக்களை அறிவிப்பொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும், சம்மாந்துறையின் முக்கிய ஜீவனோபாய தொழிலான நெற்செய்கை தற்போது அறுவடைசெய்யப்படுகின்றது. பொது மக்களும், வாகனம் செலுத்துவோரும் இரண்டு வாரங்களுக்கு பொறுமை காத்து விவசாயிகள் தமது நெற்களை வீதிகளில் உலர்த்துவதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.