மன்னார் மாவட்டத்தில் ‘நாடு’ இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 2022/2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2023.02.09 ம் திகதி, சுற்று நிருபத்திற்கு அமைவாக, மாவட்ட செயலாளர் தலைமையில் சிறிய மற்றும் நடுத்தரளவு அரிசி ஆலை உரிமையாளர்கள் , கூட்டுறவு சங்கங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் ‘நாடு’ இன நெல்லினை மட்டும் பின்வரும் நிபந்தனை அடிப்படையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகக் கூடிய ஈரப்பதன் 14% மற்றும் ஆகக் கூடிய நெற்பதரினளவு 9% உடைய நாடு நெல்ரூபா 100/- இற்கும், ஈரப் பதன் 14% ற்கும் அதிகமான மற்றும் 22% அதற்கு குறைந்த நாடு நெல் ரூபா 88/- க்கும் கொள்வனவு செய்யப் படவுள்ளது.
இத் திட்டத்தில் நெல்லை வழங்குவதற்கு தயாராகவுள்ள விவசாயிகள் இது பற்றிய தகவல்களை உடனடியாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்திற்கு (023-2222162) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை, காலை 9.00 தொடக்கம் மாலை 4மணி வரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.