முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று , மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டமூடாக 20000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த பொருட்கள் விநியோகம் காகில்ஸ் பூட்சிட்டி ஊடாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் காகில்ஸ் பூட்சிட்டியில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பாக மா, உருளைக்கிழங்கு, செத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நகர் பகுதிகளில் உள்ள கடைகளை விட பல மடங்கு விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக பல்வேறு தரப்புக்களிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக வறுமையை போக்கும் நோக்கோடு இந்த உதவி வழங்கப்படுகின்ற நிலையில் இருபதாயிரம் ரூபாவுக்கு வெளி இடங்களில் பதின்மூவாயிரம் பதின்நான்காயிரம் ரூபாவுக்கு வாங்க கூடிய பொருட்களையோ பெறுகிறோம் இதனூடாக பாரிய மோசடி இடம்பெறுகிறது எனவும் சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்த இருபதாயிரம் ரூபாவுக்கான வவுச்சர்களை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கியது போல விரும்பிய கடையில் பொருட்கள் வாங்க கூடிய வகையில் வழங்கியிருந்தால் நாங்கள் விலை குறைந்த இடங்களில் பொருட்களை பெற்றிருப்போம் இவ்வாறு திட்டமிட்டு ஒரு நிறுவனத்தில் வழங்குவதால் எமக்கு தேவையான பொருட்களையும் வாங்க முடியவில்லை முந்துபவர்கள் பொருட்களை வாங்குவதால் பிறகு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த பொருட்களை நியாயமான விலையில் அல்லது நாங்கள் விரும்பிய கடையில் வாங்க கூடிய வகையில் ஏற்ப்பாடு செய்யுமாறு மக்கள் கோருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெறுகின்ற நிவாரண நடவடிக்கைகள் மக்கள் கருத்துக்களை பெற ஊடகவியலாளர் சென்றபோது குறித்த விநியோகம் நடைபெற்ற காணிக்குள் உள்நுழைய விடாது பிரதான வாயிலை மூடி காகில்ஸ் பூட்சிற்றி நிர்வாகம் அடாவடியில் ஈடுபட்டனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர்.