Monday, December 23, 2024

ஊடகவியலாளர் கடமைக்கு இடையூறு- பொலிசாருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்! குமணணிடம் வாக்குமூலம் பதிவு!

Must read

வட்டுவாகல் பகுதியில் ஊடகவியலாளர் குமணனின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான  பொலிசாருக்கு எதிரான விசாரணைகள் முல்லைத்தீவுஉதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை தளத்துக்கு தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப்  பணிகள் கடந்த 07.06.2022 இடம்பெறவிருந்த நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களான தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லைத்தீவு  வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் முன்பாக போராட்டம் மேற்கொண்டிருந்தனர் . 
இதனை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு  முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களால்  இடையூறு மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மக்கள் போராட்டம் மேற்கொண்ட இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை நோக்கி வந்த கடற்படை அதிகாரி  இங்கு புகைப்படம் எடுக்கமுடியாது என அச்சுறுத்தியதோடு பொலிசாரை அழைத்து இவரது ஊடக அடையாள அட்டையை பரிசோதியுங்கள் என கட்டளையிட்டதோடு இவரை கைது செய்யுமாறும் பணித்தார் .
இதனால் அப்பகுதியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் ஊடகவியலாளர் குமணனை கைகளால் கோர்த்து தடுத்து வைத்திருந்து ஊடக அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தியதோடு கைத்தொலைபேசியில் ஊடக அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு பொலிசார் முன்பாகவே ஊடகவியலாளரை இலக்குவைத்து  அச்சுறுத்தும் பாணியில் நெருங்கி வந்து கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்த சிவில் உடை தரித்த ஒருவர் உடனடியாக புகைப்படம் எடுத்துவிட்டு EP BGJ 0353 என்ற இலக்கத் தகடுடைய  மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.  
இதேவேளை கடற்படையினரோடு இணைந்து சிவில் உடையில் நின்ற சிலர் போராட்டக்காரர்களையும் ஊடகவியலார்களையும் புகைப்படம் எடுத்த போதிலும் பொலிஸார் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை மாறாக கடமையில் இருந்த ஊடகவியலாரை கைது செய்யும் பாணியில் பிடித்து தடுத்து வைத்ததோடு புகைபடம் எடுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபடும் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விடயம் இடம்பெற்ற தினமே  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணி தலைவரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமாகிய முத்துச்சாமி முகுந்தகஜன் அவர்கள் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் சம்பவத்துக்கு நீதி கோரி பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
குறித்த கடிதத்தில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு  ஊடகவியலாளரை அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு இந்த ஊடகவியலாளருக்கான நீதியினை பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.
இதனை தொடர்ந்து 2022.06.27 அன்று பிரதமரின் சிரேஸ்ர உதவிச் செயலாளர் அவர்களால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களுக்கு கடிதம் மூலம் குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் குறித்த விடயம் பொலிஸ் மா அதிபர் ஊடாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் கடந்த 19.12.2022 அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான முத்துச்சாமி முகுந்தகஜன் அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை  குமணன் அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக   29.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு வருகை தருமாறு  பொலிசார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் அவர்களிடம்  அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். 
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை  குமணன் வாக்குமூலம் வழங்குவதற்காக 29.12.2022 அன்று காலை   முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு வருகை தந்த நிலையில் தற்போது குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article