Saturday, November 23, 2024

கிரான் புளிபாய்ந்தகல் பாலத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்

Must read

மட்டக்களப்பு கிரான் புளிபாய்ந்தகல் பிரதேசத்தில் சேதமடைந்துள்ள பாலத்தினை புனரமைக்கும்  பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு  தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியளாலர் மாநாடு நேற்று (02) மட்டக்களப்பில் இடம்பெற்றது. 

இதன்போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில் “இப்பாலம் திடீரென்று உடைப்பெடுத்திருப்பது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது திடீரென்று ஏற்பட்டிருக்கும் அனர்த்தம். எதிர்பாராத அளவில் மிக ஆழமாக  அரிப்பெடுத்து, பெரிய கிடங்குகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தற்காலிகமாக புனரமைப்பதென்றால் கூட சேதமடைந்திருப்பவற்றை அகற்றி, கொங்றீட் இட்டு, தண்ணீரும் வடிந்தோடக் கூடிய ஒரு கட்டுமானத்தைச் செய்யவேண்டும். இந்த மாதம் இறுதியில் தான் இதனைப் பூர்த்தி செய்யமுடியும். இதற்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா அளவிலான நிதி தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. இந்த வீதி மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட வீதியாகும். மாகாணசபையிடம் அதற்கான பணம் இல்லை என்ற அடிப்படையில் அதனை அமைச்சின் நிதியிலிருந்து செய்வதற்கான வேண்டுகோளை தமக்கு விடுக்குமாறு குறிப்பிட்டார். மேலும் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் மிக மோசமான நிலையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்  என்பதை தான்அறிவதாகவும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். 

இதுதவிர அப்பகுதியில் தண்ணீரின் வேகம் குறைவடைந்ததும் ஜனவரி மாதம் முடிவதற்குள் அந்தப் பாதையால் போக்குவரத்துச் செய்ய முடியும் எனத் தான் நம்புவதாகவும்இராஜாங்க அமைச்சர் மேலும்  சுட்டிக்காட்டினார்.

இதன்போது கிழக்கு  மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எம். ராஜகோபால், வீதி அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண பணிப்பாளர் கே. சிவகுமார், மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியிலாளர் எம். ரிஸ்வி,  மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே. ஜெகன்நாத், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ் குமார் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article