கிழக்கு ஊடாக மன்றம் – வாழைச்சேனை ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) காலை 11.11 மணிக்கு சுபவேளையில் புதுவருடத்தினை முன்னிட்டு வாழைச்சேனையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் புதுக்குடியிருப்பு வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத் தலைவர் வை.பரராஜசேகரம் முதியோர் சங்கத் தலைவர் க.நடேசன்,கோறளைப்பற்று பிரதேசத்தின் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் ச.சஜேந்திரன் மற்றும் உலகெலாம் நூலாசிரியர் கௌரவ கலாநிதி ந.பிரதீபன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி இறை ஆசி வேண்டியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து ஊடக மன்றத்தினை அங்குரார்ப்பனம் செய்து வைத்தனர்.
இதன் போது பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்றத்தின் தலைவர் க.ருத்திரன் உரையாற்றும் போது பெரும் சவால்களுக்கு மத்தியில் பிரதேசத்தில் ஊடகவியலாளர்களின் நீண்ட கால எண்ணத்தின் அடிப்படையில் இவ் ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெறும் ஊடக செயற்பாடு மட்டுமின்றி சமூகமேம்பாட்டிற்கு ஊடகத்துறையின் பங்கு முக்கியத்துவம் என்ற அடிப்படையிலேயே இவ் ஊடக மன்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்தார்.இது நடு நிலையாகவும் வெளிப்படுத்தன்மையாகவும் இவ் ஊடக மன்றம் செயற்படும் எனவும் அங்குரார்ப்பனம் செய்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.