முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்றும் இரண்டாவது நாளாக (14)முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நேற்றையதினம் (13) அளவீட்டு நடவடிக்கை இடம்பெறும் என அறிந்து மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடற்படைமுகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் இந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளர்கள் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக காணி பகுதி அலுவலகங்களை அளவீட்டு நடவடிக்கை இடம்பெறும் இடத்துக்கு கடற்படை வாகனம் ஒன்றில் இரகசியமாக துப்பாக்கி முனையில் அழைத்து சென்று காணிகளில் அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அறிந்த காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்களும் கோத்தபாய கடற்படை முகாம் வாசலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று பாதையை பயன்படுத்திய கடற்படையினர் காணிகளில் அளவீட்டு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்திருந்த நிலையில் காணி உரிமையாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலகம் சென்று மேலதிக மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலர் (காணி) குணபாலன் ஆகியோரை சந்தித்து இரகசியமுறையிலான காணி அளவீட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு தமது காணிகளை எந்த நிலையிலும் கடற்படை தேவைகளுக்கு சுவீகரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை பதிவு செய்ததோடு இன்றையதினம் இடம்பெற்றுவரும் நில அளவீடு சட்ட விரோதமானது என்பதோடு காணி உரிமையாளர்களின் பங்கேற்பு இன்றி இடம்பெற்றுவரும் இந்த நடடிக்கை தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இராணுவ மயமாக்களுக்கு உடந்தையானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மாவட்ட செயலக அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது .
இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று(14)அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.
தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்ததோடு கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச தயாராக நிறுத்தப்பட்டிருந்ததோடு பெருமளவான புலனாய்வாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.அத்தோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது