Friday, January 10, 2025

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை

Must read

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப்  போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(20) அன்று மாலை  நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு உள்ளிட்ட  பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.இதில் குறித்த தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது  கையொப்பங்களை இட்டு  இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு உங்களினதும்  உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்காகவும் பாடுபட முன்வர வேண்டும்.

இந்த நாட்டில் கொடூரமான தடைச்சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதை நாம் அறிவோம்.அந்த வகையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டமானது மேற்கொள்ளப்படுகின்றது.எனவே  இந்த சட்டத்தை முற்றாக எமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அத்துடன் நாம் அங்கம் வகிக்கின்ற கல்முனை மாநகர  சபையில் கூட எதிர்வரும் மாதாந்த அமர்வில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு   பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.எமது மாநகர சபைக்கு தமிழர்கள் தரப்பில் தார்மீக ஆதரவினை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் முழு மாநகர உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு தத்தமது ஆதரவினை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி விசேட செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை  முன்னாள் எதிர்கட்சி தலைவருமான குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் சோ.குபேரன் தி.இராசரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article