மட்டக்களப்பு எல்லாக்கிராமமான ஊத்துச்சேனை காட்டில் தேன் எடுக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று காணாமல் போன முதியவர் ஒருவரை பிரதேச மக்கள் தேடுதலில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (17) மீட்கப்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய கசிப்பிள்ளை சந்திரசேகரம் வழமைபோல சம்பவதினமான நேற்று காலையில் வுpட்டில் இருந்து தேன் எடுப்பதற்காக காட்டுக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து அவர்காணாமல் போயுள்ளார் இதனையடுத்து இன்று திங்கட்கிழமை காலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றினைந்து காட்டில் காணாமல் போன முதியவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது காட்டுயானை தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களினால் நடக்கமுடியாத நிலையில் காட்டில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அவரை அங்கிருந்து மீட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக ஊத்துச்சேனை கிராமஅபிவிருத்தி சங்க தலைவர் மோகன் தெரிவித்தார்.