முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சின்னாறு முகத்துவாரம் மற்றும் வட்டுவாகல் முகத்துவாரத்தை வெட்டி மேலதிக நீரை கடலுடன் கலக்கவிடுவது மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(03) பி.ப 2.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட புரவி சூறாவளி காரணமாக நேற்று பெய்த காற்றுடனான கடும்மழை காரணமாக சின்னாறு பாலத்திற்கு மேலாக நீர் பாய்கிறது. குறித்த முகத்துவாரத்தை வெட்டுவது தொடர்பாக அப்பகுதி அமைப்புக்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
இந் நிலையில் குறித்த முகத்துவாரத்தை வெட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு இறுதியாக அப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் எதிர்ப்பக்கத்தில் உள்ள வயல்களின் நிலை கருதி கடல் நீர் உட்புகாதவாறு மண் அணைகள் அமைக்கப்பட்டு மேலதிக நீரை கடலில் சேரவிட்டு பின் அதனை அடைத்து விடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் குறித்த முகத்துவாரத்தில் நிரந்தரமாக மடைக்கதவு (Water regulator) அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இப் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நீர் இதுவரை எழாதிருப்பதுடன் பாதிப்பெதுவும் நிகழாதிருப்பதனால் குறித்த முகத்துவாரத்தை வெட்டாது பாலத்தின் இரு பக்கங்களையும் தெளிவுபடுத்த அடையாளமிடுவதாக முடிவெடுக்கப்பட்டது.
வட்டுவாகல் பாலத்தடியின் சூரிய மின்கலம் இயங்காதுள்ளதாக சமாசத்தினர் கோரிக்கையொன்றை விடுத்தனர். அதனடிப்படையில் அப்பகுதியில் மேலதிகமாக மின்குமிழ்களை பொருத்துவது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், கேணல் கமால் தர்மவர்த்தன, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சமாச அங்கத்தவர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
சண்முகம் தவசீலன்