அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இப்பிரதேசங்களில் பொலிஸ் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
குறித்த பொலிஸ் பிரிவிற்குள் உள்ளடங்கும் பாலமுனை ,அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ,உள்ளிட்ட பகுதிகளில் இன்று(28) காலை முதல் மாலை வரை முக்கிய சந்தைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(27) அக்கரைப்பற்றில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேலும் 4 பேருக்கு பிசிஆர் அறிக்கைகள் மூலம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்ந்து இந்நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை(26) அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுட்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ,மற்றும் அட்டாளைச்சேனை, ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி தங்களது வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூன்றாம் நாளான இன்று (28) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் கடைகள், வர்த்தக் நிலையங்கள், சந்தைகள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூட்பட்டு சன நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதே வேளை அக்கரைப்பற்று பொதுச் சந்தைப் பகுதியில் பிசிஆர் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்ட 31 கொரோனா தொற்றாளர்களும் பாலமுனை மற்றும் பதியத்தலாவ கொரோனா நோய் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசங்களிலுள்ள வணக்கஸ்தலங்களிலும் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டுவருகின்றன.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர், தொடர்பு பட்டவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் அனைத்தும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்தி சுகாதாரப் பணிப்பாளர் ஜீ. .சுகுணன் தெரிவித்தார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளான பிரதேச செயலங்கள், வைத்தியசாலைகள், வங்கிகளின் சேவைகள், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.
வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளமையினால் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து சுதந்திரமாக திரிகின்றன.