உயிரிழந்த பிணமதனை உடைமையாலும் உவப்பில்லாக் கடதாசிப் பூவினாலும் இயன்றளவும் மூடி இன்புற்றாலும் இறந்த பிணம் இறந்ததுதான் உயிர்ப்பங்கில்லை!
பயின்றதுவோ பல நூறு நூலானாலும் பாவிலக்கணம் தேடிப்படித்திட்டாலும் முயன்றெழுதும் கவிதை வெறும் சொற்கூட்டன்றி முழங்கு பிறவிக் கவியின் முதிர் வாக்காமோ?
காரிகையோ கற்றறியான் கவிதை பாடும் கலையினிலே வியன் பெற்றான் என்றாலீது பாரினிலே புதுமையென்பார். கவிஞன் பட்டப் படிப்பதனைப் படிப்பதனால் ஆவதில்லை!
பேரினிலே ஒன்றில்லை பிறப்பிலேதான் பிறக்கின்றான் கவிஞனென்பதோர் பேருண்மை. ஆரினிமேல் கவிஞனென்ற ஐயம் வேண்டாம். அவன் பாட்டில் உயிருண்டாவென்று மட்டும் பாரீர்!
யார் கவிஞன்? என்ற தலைப்பில் தியாகி என்ற புனைப்பெயரில் எஸ்.டி.சிவநாயகம் எழுதிய மேற்படி கவிதை வரிகள் 1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி எஸ்.டி.சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஐக்கிய தீபம் பத்திரிகையில் பிரசுரமானது.
1946ஆம் ஆண்டுப் பத்திரிகையுலகப் பிரவேசத்துக்கு முன்னதாகப் பள்ளிப் பருவத்திலேயே பாடசாலைப் பத்திரிகையொன்றின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் எஸ்.டி.சிவநாயகத்துக்கு உண்டு. ஐக்கிய தீபம் பத்திரிகைக்கு அடுத்து 1947ஆம் ஆண்டு தனது சொந்தப் பத்திரிகையான உதயம் பத்திரிகைக்கு ஆசிரியரானார் சிவநாயகம். இப்பத்திரிகையின் ஞாபகமாகத்தான் பின்னாளில் தன் மூத்த மகனுக்கு உதயநாயகன் என்று பெயர் சூட்டினார் போலும்.
மேற்படி பத்திரிகைகளின் அனுபவங்கள் மூலம் 1948 ஆம் ஆண்டு தினகரன் பிறகு சுதந்திரன், வீரகேசரி, 1966 ஆம் ஆண்டு முதல் எம்.டி.குணசேனாவின் இன்டிபென்டன்ட் நியூஸ்பேர்ப்பர்ஸ் ஸ்தாபனத்திலிருந்து வெளியான தினபதி, சிந்தாமணி, சூடாமணி என்று அவரது பத்திரிகையுலகப் பவனிகளும் பணிகளும் அவரை ஜாம்பவானாக்கியது.
தியாகி, அரசகேசரி, நவரசகேசரி, குயுக்தியார், திரிஞானி என்று பல புனைப் பெயர்களுக்குச் சொந்தக்காரரான எஸ்.டி.எஸ். எழுதிய ஆக்கங்கள் ஏராளம். அத்தனையும் வாசகர்களுக்குத் தாராளம்.
கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம், நாடகம், சினிமா, டி.வி. விமர்சனங்கள், வினா விடை, பயணக் கட்டுரைகள், சோதிடம், அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள், ஆன்மீகம், வைத்திய ஆலோசனைகள் என்று எல்லாத் துறைசார்ந்த அனுபவங்களையும் ஆற்றல்களையும் அறிந்த அட்டாவதானி ஆசிரியராகத் திகழ்ந்தவர்தான் எஸ்.டி.சிவநாயகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
படித்தவர்கள், பண்டிதர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் கவரக்கூடிய அம்சங்களை எல்லாம் பத்திரிகையில் அறிமுகப்படுத்திய காரணத்தால்தான் சிந்தாமணி வார இதழ், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றிலேயே ஒரு இலட்சம் விற்பனையில் சாதனை படைத்தது.
அதற்காகச் சிவநாயகத்துக்குக் கிடைத்த பரிசும் பாராட்டும்தான் அந்தப் பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக, ஆசிரியரான அவரையும் அங்கீகரித்தது!
அன்றைய காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் பலராலும் பாராட்டப்பட்ட எஸ்.டி.சிவநாயகத்தின் தினபதி, சிந்தாமணிப் பாசறை மூலம் உருவாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து பணியாற்றி வருகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தைப் பொறுத்தவரையில் வெகுஜனத் தொடர்புத் துறையில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி இவைகளுக்கிடையில் போட்டி நடைபெறுவது அனைவரும் அறிந்ததே.
இம்மூன்றும் ஒரு சாதாரண நபரிடம் ஏற்படுத்தும் தாக்கத்தின் வேறுபாடுகள் என்ன என்று அந்தநாள் ஞாபக வானொலிப் பேட்டியின் போது புவனலோஜனி கேட்ட கேள்விக்கு எஸ்.டி.சிவநாயகம் அளித்த பதிலை இன்று நினைவு கூருவோமாக…….
மூன்று ஊடகங்களும் ஒரே விதமான தாக்கத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆனால் வானொலியும் தொலைக்காட்சியும் மிக வேகமாகச் சென்றடைந்து விடுகின்றன. ஆனால் பத்திரிகைகளோ மறுநாள் காலைதான் அந்தச் செய்தியைத் தரமுடியும். ஆனால் பத்திரிகை ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமானது. அது அச்செழுத்துக்களில் இருப்பதால் ஒரு நிரந்தரப் பதிவை வாசகர்களுடைய மனதில் ஏற்படுத்துகின்றது.
ஏனென்றால் ஒரு தடவை வானொலியில் கேட்கலாம் அல்லது டி.வியில் பார்க்கலாம். ஆனால் பத்திரிகை மூலமோ திரும்பத் திரும்பப் படிக்க முடிகிறது. அதனால் பத்திரிகை ஏற்படுத்தும் தாக்கம்தான் நிரந்தரமானது என்றார் எஸ்.டி.சிவநாயகம். அன்னாரது 16 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
இவரது துணைவியார் மங்களாவதி சிவநாயகமும் கடந்த வாரம் 8 ஆம் திகதி தனது 88 ஆவது வயதில் காலமானார். பத்திரிகை ஆசிரியரான கணவருக்குப் பள்ளிக்கூட ஆசிரியையான பாரியாரும் பக்கத்துணையாக உதவிகள் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.