மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு, பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவுகளில் புதுவருட தினமான நேற்று வியாழக்கிழமை யானையின் அட்டகாசம் காரணமாக 3 வீடுகளும், 4 பயிர்ச்செய்கைக் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.
நேற்றைய தினம் அதிகாலை நேரத்தில் இக்கிராம சேவையாளர் பிரிவுகளின் மாவிலங்கடிச்சேனை, பாரதி நகர் கிராமங்களுக்குள் புகுந்த யானை வீடுகளை உடைத்து அதனுள் இருந்த நெல், அரிசி, தானிய வகைகள், உணவுப் பொருள்களை உண்டுள்ளது.
அத்துடன், யானையின் தாக்குதல் காரணமாக வீட்டு தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் என பெருந்தொகைப் பொள்களும் சேதமாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில், மாவிலங்கடிச் சேனையில் 4 பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய விவசாயி வேல்முருகு பரமானந்தம் என்பவரின் வீட்டைஉடைத்துள்ள யானை அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளது. இவருடைய வீடு இதற்கு முன்னர் 3 தடவைகள் கடந்த வருடங்களில் உடைக்கப்பட்டுள்ளது.
கந்தசாமி சிவபாலன் (45) என்பவருடைய பயிர்ச்செய்கை குடியிருப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று 5 பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் பிரகலாதனின் வீட்டை உடைத்து அங்கிருந்த நெல் உள்ளிட்ட பொருள்களை உண்டுள்ளது. இவருடைய வீடு கடந்த வருடத்தில் பல தடவைகள் உடைக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம், 5 மூடை நெல் , 2 மூடை அரிசி, பயறு, சோளம் உள்ளிட்ட உணவு, தானியங்களை உண்டுள்ளதுடன், வீட்டுத்தளபாடம், சமையல் பாத்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன், நாகண்டப்போடி மாரிமுத்து, நாகண்டப்போடி சந்தியாப்பிள்ளை, ஆகியோரது வீடுகளையும் யானை சேதமாக்கியுள்ளது.
அதே நேரம், பாரதி நகரிலும் கேதாரப்பிள்ளை தியாகராசா என்பவரது குடியிருப்பும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களுக்கு சென்று யானை தாக்கி சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்களுடன் நிலைமை தொடர்பில் உரையாடியதுடன் தற்காலிக இருப்பிடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், அப்பிரதேசத்திலிருந்து யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருடன் உரையாடி ஈடுபட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக 3 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், பயன்தரு மரங்களையும் யானை தாக்கி சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் படுவான்கரைப்பகுதியில் யானையின் தாக்குதல் அதிகரித்துவருவதுடன் உயிரிழப்புகளும் வீடுகள் சொத்துக்கள் சேதமடைவதும்தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.
கடந்த வாரம் வெல்லாவெளி பிரதேசத்தில் யானையின் தாக்குதலை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதன் அடிப்படையில் யானையொன்று பிடிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.