Wednesday, January 22, 2025

வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

Must read

Vadakke Pogum Rail A.Raviwarma ஈழநாட்டுப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்தவரே சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்கள். தினக்குரல், இடி, மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் சுடர் ஒளி ஆசிரிய பீடத்தில் தற்போது பணிபுரிந்து வருவதை அறியமுடிகின்றது. கவிதை, சிறுகதை போன்ற துறைகளில் தனது நாமத்தை சிறப்பாகப் பதித்துள்ள இவர், இலக்கியம்,ஆன்மீகம், விளையாட்டு, அரசியல் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பத்திரிகைத் துறையைப் பொருத்தமட்டில் துணுக்குகள், பத்தி எழுத்து, விளையாட்டு, விவரணக் கட்டுரை ஆகியவற்றுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆங்கில, சிங்கள மொழிப் பத்திரிகையாளர்களுடன் போட்டியிட்டு விவரணக் கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூரன் ஏ. ரவிவர்மாவின் கன்னிச் சிறுகதைத் தொகுதி வடக்கே போகும் மெயில் என்ற மகுடத்தில் சிறுகதைகளையும், குறுங்கதைகளையும் உள்ளடக்கியதாக காயத்திரி பப்ளிகேஷன் மூலம் வெளிவந்துள்ளது.

இவரது சிறுகதைகள் யதார்த்தமானவை. மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற கஷ்டங்களையும், சோகங்களையும் படம் பிடித்துக்காட்டும்படியாக தனது சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்து நடை வாசகர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் அமைந்துள்ளது சிறப்பு. 80 பக்கங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் வடக்கே போகும் மெயில், போனால் போகட்டும், பொன்னுக் கிழவி, மிலேனிய அப்பா, என்னைத் தெரியுமா?, செல்லாக் காசு, தாலி பாக்கியம், திக்குத் தெரியாத…, முடிவிலும் ஒன்று தொடரலாம், குல தெய்வம், தண்ணீர் தண்ணீர், திரைகடல் ஓடியும், கொக்கு வெடி, என்று மறையும், காவியமா நெஞ்சில் ஓவியமா?, விடியலைத் தேடி ஆகிய 16 தலைப்புக்களிலேயே கதைகள் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு பரம்பரையாகத் தொடரும் எழுத்தூழியம் என்ற தலைப்பிட்டு தனது ஆசியுரையை லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா) அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர் தனது ஆசியுரையில் ”வடமாரட்சியில் அடிநிலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை.

இயல்பிலேயே இலக்கிய நாட்டமும், பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன. ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவி புனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பேசத் தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்துக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள் காரணமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும், ஊடகவியலாளராக செய்திகளைச் செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல் மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும் சிறப்பிக்க முடியும்.

ரவிவர்மாவின் பின்புலம் மனித உரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது” என்கிறார். அதேபோல் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கனடாவைச் சேர்ந்த க. நவம் அவர்கள் தனதுரையில் ”வடக்கே போகும் மெயில் திரட்டினை படித்து முடிக்கும் வாசகர்கள், இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுதுபோக்கு அம்சங்களைக் கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரரல்ல என்பதையும், பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும், அக்கறையும் கொண்ட ஒரு மனித நேயப் படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர்.

சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தமது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார். எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும், அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி, மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.”

என்கிறார். இந்தத் தொகுதியிலுள்ள வடக்கே போகும் மெயில், தாலி பாக்கியம், திக்குத் தெரியாத…, குலதெய்வம், தண்ணீர் தண்ணீர், என்று மறையும், விடியலைத் தேடி ஆகிய கதைகள் நேரடியாக அல்லது மறைமுகமாகவேனும் யுத்த கால கெடுபிடிகள், கஷ்டங்கள், பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஞாபகப்படுத்தி மனதை ரணப்படுத்துகின்றன.

போர்காலச் சூழலுடன் பின்னிப் பிணைந்த இக் கதைகள் நிச்சயமாக அச்சூழலைக் கடந்து வந்த மக்களின் மனதில் ஒரு உஷ்ணமான பெருமூச்சை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வடக்கே போகும் மெயில் (பக்கம் 13) என்ற சிறுகதை ரயில் பயணத்தை உணர்வு பூர்வமாக சித்திரித்திருக்கின்றது. கதாசிரியர் சொல்லும் பாங்கில் ரயிலில் வாசகர்களும் பயணம் செய்வது போன்ற ஒரு மனநிலை ஏற்படுவது மொழிநடைச் சிறப்பு என்று கூறலாம். அன்றாடம் பயணம் செய்பவர்கள் வெகு சாதாரணமாக எதிர்நோக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒரு சிறுகதையாக கூறியிருக்கிறார்.

இச்சிறுகதையில் பயணிகள் பற்றிய மனப்பதிவுகள் கூறப்படுவதோடு திடீரென ஒரு கும்பல் ரயிலுக்குள் ஏறி தமது அடாவடித்தனங்களை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சொற்ப நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதத்தில் உயிர்களும், உடமைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனூடாக இனப்பிரச்சினையின் கொடுமை பற்றியும், அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காசு இருக்கும்போது மற்றவர்களை இழிவாகப் பார்த்தவர்களுக்கும், ஊனமானவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் தமக்கென துன்பம் வரும்போது அதை உணர்ந்துகொள்வார்கள் போன்ற தத்துவச் சிந்தனைகளும் இச்சிறுகதையில் பொதிந்துள்ளமை அவதானத்துக்குரியது. என்னைத் தெரியுமா? (பக்கம் 31) என்ற சிறுகதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்ட ஒரு யதார்த்தமான சிறுகதையாகும். பொழுதுபோக்குச் சாதனமாகக் கருதப்படும் வானொலியினால் இன்று பலரது வாழ்க்கையை சிதைத்திருக்கின்ற சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன.

அதில் மிக முக்கியமான அம்சம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது, தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கும் நேரத்தில் தொலைபேசியில் பெண்கள் தங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லிவிடுவதுதான். இச்சிறுகதையில் வரும் கல்பனா என்ற பாத்திரமும் அத்தகைய இயல்பைக் கொண்டவள். கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார் என்ற தகவல் தொடக்கம் தனக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் வரை ஊருலகத்துக்கே சொல்கின்றாள். பிறகு திருடன் அவளது வீட்டுக்கு வருவதைக் கண்ட பக்கத்து வீட்டார் பொலிசுக்கு அறிவிக்கின்றனர்.

இதுதான் சாராம்சம். இக்கதை சொல்ல வரும் சேதி எத்தனை ஆழமானது? பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண்கள் பக்குவமில்லாமல் இவ்வாறு நடந்துகொள்வது நடைமுறையில் இருப்பதை மறந்துவிடக்கூடாது. யதார்த்தத்துக்கு புறம்பான கற்பனைக் கதைகளை மக்கள் ரசிப்பதைவிட இவ்வாறான கதைகள் வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் சிறப்பான சிறுகதையாக இதைக் கொள்ளலாம். தாலிபாக்கியம் (பக்கம் 38) என்ற சிறுகதையின் ஆரம்பம் கற்பனைகள் பலதை ஏற்படுத்திவிடுகின்றது. வாசிப்பின் இடையில் வயதான வள்ளிப்பிள்ளை – கந்தசாமி தம்பதியர் மீண்டும் திருமணம் செய்துகொள்கின்றார்கள். காரணம் இப்போது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசதியாக வாழ்வதால் காசுக்குப் பஞ்சமில்லை.

எனவே வள்ளியம்மைக்கு புதுத்தாலி மற்றும் நகைகளை அணிவித்துப் பார்க்க ஆசைப்படுகின்றார் கந்தசாமி. ஊரார்கள், நண்பர்கள் அனைவருக்கும் தடல்புடல் விருந்து கொடுக்கப்டுகின்றது. கதையின் இறுதியில் மகனது கல்யாண விடயமாக தரகரைச் சந்திக்க செல்லும் கந்தசாமி டவுன் பக்கம் ஹர்த்தால் என்பது தெரியாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிடுகின்றார். குதூகலமாக வாசித்த சிறுகதை மனதில் ஈரத்தை கசியச் செய்கின்றது. ஒரு சின்ன சிறுகதையில் இதயத்தை உருக்கும் விடயத்தை உள்ளடக்கியிருக்கும் பாங்கு சிறப்பிற்குரியது எனலாம். திக்குத் தெரியாத… (பக்கம் 42) என்ற சிறுகதை யுத்த காலகட்டத்தை நினைவுபடுத்திச் செல்கின்றது. யார் குண்டு வைத்தாலும் சிறுபான்மை இனத்தவரை சந்தேகம் கொண்டு பார்த்து பொலிசுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பார்கள்.

செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதிவிடுவார்கள். அத்தகையதொரு பிண்ணனியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதையில் வரும் அவனும் பொலிசாரினால் ஏற்றிச்செல்லப்படுகின்றான். பொலிஸில் உள்ள கம்பிக்கூண்டினுள் அவனுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கின்றனர். பிரபு என்ற அந்த மாணவனுக்கு தமிழ் பத்திரிகையைக் கொடுத்து படிக்கச் சொல்லுகின்றனர்.

காரணம் அவன் வருவதற்கு முதல்நாள் அந்தப் பிரதேசத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. கண்டியைச் சொந்த ஊடராகக் கொண்ட அவனை அந்தத் தமிழ் பத்திரிகையை வாசிக்கச் சொல்லி அதட்ட, அவன் மறுக்கின்றான். பொலிசார் மிகவும் கடுமையாக நடந்துகொள்கையில், அவன் சிங்கள மொழி மூலமே கற்றுக்கொண்டிருப்பதாகவும், தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்றும் கூறுகின்றான். அவனுக்கு அடிக்க கையை ஓங்கிய அதிகாரி அதிர்ச்சியடைவதாக கதை நிறைவடைகின்றது. முடிவிலும் ஒன்று தொடரலாம் (பக்கம் 47) என்ற சிறுகதை தொழிலாளர் பிரச்சனை பற்றிப் பேசுகின்றது. அன்று தொடக்கம் இன்று வரை தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்வதும், தொழிற்சாலை நிர்வாகம் வேறு தொழிலாளிகளை வேலைக்குச் சேர்ப்பதும் நடந்தேறி வரும் விடயமாகும்.

வறுமையில் வாடுபவர்கள் வேறு வழியில்லாமல் குறைந்த சம்பளத்துக்காக வேலைக்குச் சென்றுவிடுகின்றார். இயலுமானவர்கள் தெரிந்தவர்களின் கையைக் காலைப் பிடித்தேனும் வேறு தொழில்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள். முதலாளி வர்க்கத்தினர் என்றும் போல சுகபோக வாழ்க்கை வாழ்வதும், தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே மாய்ந்து போவதும் விதி என்றால் அதை மாற்ற யாராலும் முடியாதே. இவ்வாறாக பல யதார்தமான விடயங்களை கருப்பொருட்களாக வைத்தே தனது சகல கதைகளையும் நூலாசிரியர் படைத்துள்ளார். ஏகாம்பரம் ரவிவர்மா எழுதிய தமிழக அரசியல், திரைக்கு வராத சங்கதி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள், பாடல் பிறந்த கதை ஆகியவை வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

தனது ஆசிரியபீடப் பணிகளில் பல புதிய கவிஞர்களையும், எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இவருக்கு உண்டு. திரு. ரவிவர்மா இதுவரை பத்திரிகைளில் எழுதி வெளிவந்த பல கவிதைகளையும் தொகுத்து ஒரு கவிதை நூலாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!!!

நூலின் தலைப்பு – வடக்கே போகும் மெயில் நூல் வகை – சிறுகதை நூலாசிரியர் – சூரன் ஏ. ரவிவர்மா வெளியீடு – காயத்திரி பப்ளிகேஷன் விலை – 250 ரூபாய்

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article