மட்டக்களப்பின் பாரம்பரியங்களை பறைசாற்றும் விதத்திலும், தமிழர் கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துரைக்கும் வகையிலும் வடிக்கப்பட்டுள்ளமை மட்டக்களப்பு காவியம் எனும் நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கதிரவன் கலைக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உலக நண்பர்கள் அமைப்பின் இசைவோடு வாகரை வாணனின் மட்டக்களப்பு காவியம் நூல் சனிக்கிழமை கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவின் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்ணம், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூல் நயவுரையினை செங்கதிரோன் கோபால கிருஸ்ணன் நிகழ்த்தினார். அத்துடன் நிகழ்வில், வாகரை வாணன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப் பாவும் வழங்கப்பட்டது.
கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், நாடகங்கள் என பல்வேறு இலக்கியங்களை வெளியிட்டுள்ள வாகரை வாணனின் 37ஆவது பதிப்பாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம் என்ற இயற் பெயரைக் கொண்ட வாகரை வாணன் கவிஞன், ஆய்வாளன், மொழிபெயர்ப்பு இலக்கியவாதி, சிறுவர் இலக்கிய கர்த்தா, நாடகத் தயாரிப்பாளர், சிறுகதை ஆசிரியர், வரலாற்று ஆசிரியர் எனப் பல்வேறு துறைசார் செயற்பாட்டாளர் ஆகும்.