யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.
தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காதவையாகும்.
இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த பெறுமதியான நூல்கள் அங்கே இருந்தன.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள கல்விமான்கள். புத்திஜீவிகள், பேரறிஞர்கள், நலன் விரும்பிகள் போன்றோரால் அன்பளிப்பு செய்யப்பட்ட பெறுமதியான நூல்கள் அங்கு இருந்தன.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் பொது நூலகம் சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
நூலகம் எரிக்கப்பட்டமை இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.