நாட்டு மக்கள் தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் நாம் முன்வைத்த விடயங்களை நாம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையுடனேயே எம்மைத் தெரிவுசெய்தார்கள் என நான்நம்புகிறேன். அதே போல் கடந்த ஒரு வருட காலத்தை எடுத்துக்கொண்டால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றிய ஒரு புதிய அனுபவத்தையே நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் தொகுப்பு,
கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்து இன்றைக்கு ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்துசென்றுள்ள இவ்வேளையில் உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டின் சமூக அரசியல் பொருளாதார துறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய உங்கள் மதிப்பீட்டை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்?
பதில்: ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல் நான் இந்தப் பதவியினை ஏற்று ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்து சென்றுள்ள இக்கால எல்லைக்குள் நான் செய்தவை என்ன? என்ன நடந்துள்ளது? மகிழ்ச்சியடையக் கூடிய நிலைமையில் நாம் உள்ளோமா? என சிலர் கேட்கின்றனர்.
இந்த நாட்டு மக்கள் தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் நாம் முன்வைத்த விடயங்களை நாம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையுடனேயே எம்மைத் தெரிவுசெய்தார்கள் என நான்நம்புகிறேன். அதே போல் கடந்த ஒரு வருட காலத்தை எடுத்துக்கொண்டால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றிய ஒரு புதிய அனுபவத்தையே நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அது எனக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் ஒரு புதிய அனுபவமாகும். 60 வருடங்களுக்கு மேலாக ஆட்சியமைப்பதற்கும் ஆளும் கட்சியினை தோல்வியடையச்செய்வதற்கும் இருபுறங்களில் இருந்து போராடிய இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிசெய்கின்றமையே அந்தப் புதிய அனுபவமாகும். ஒருபுறத்தில் இது மிகவும் சிக்கல்மிக்கதாகும். இலகுவான விடயமல்ல என்பதையும் நாம் அறிவோம். நாட்டு மக்களும் இரண்டு கட்சிகளின் அங்கத்தவர்களாக பிரிந்தே இருக்கின்றனர். ஆகையால் கருத்து ரீதியான இந்த வேறுபாடு இறந்தவர்களின் வீடுகளிலும் சரி கல்யாண வீடுகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி இந்த பாகுபாடு காணப்பட்டேவருகின்றது. பொதுமக்கள் மாத்திரமன்றி கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை புதிய அரசின் இந்த புதிய அணுகுமுறை பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
அப்படியிருந்த போதிலும் நாம் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதனாலேயே இந்நாட்டின் பிரதான கட்சிகளும் எமது வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்ற ஏனைய கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஆகியன ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. உலக நாடுகளிலும் இவ்வாறான நிலைமைகளைக் காணக்கூடியதாகவேயுள்ளது.
உலக நாடுகளில் முன்னணியில் திகழும் ஜேர்மன் நாட்டிலும் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே ஆட்சிசெய்து வருகின்றன. அவர்கள் அதை சிறப்பாக செய்துவருகின்றன. பொருளாதார தொழிநுட்ப துறைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கே தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற ஜேர்மனியினால் இவ்வித அரசியல் முறையினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமாக இருந்தால் நாமும் உலக நாடுகளுடன் இணைந்து முன்னோக்கி செல்லுகின்ற ஒரு நாடு என்றவகையில் நமது நாட்டுக்கு ஏற்ப இந்நிலைமைகளைக் கையாளுதல் வேண்டும்.
ஜேர்மன் நாடு கையாளும் அனைத்து முறைகளும் எமக்குப் பொருந்தாது என்பது உண்மை. அவர்களையே நாம் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லை. ஆகையால் எமது சமூக பொருளாதார, கலாசார தன்மைகளுக்கு ஏற்ப நமது நாட்டுக்கான ஆட்சிமுறையினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியிலேயே எம்மால் மனநிறைவு கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையிலேயே நாம் கடந்து வந்துள்ள ஒரு வருடத்திற்கு சற்று அதிகமான கால எல்லையில் கண்ணுக்கு புலப்படும் பௌதிக ரீதியான செயற்பாடுகளை காணக்கூடியதாக இல்லை என்பது உண்மையே. சிறிதளவில் அப்பணிகள் நடைபெற்றுள்ள போதிலும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற அளவில் அவை நடைபெறவில்லை. காரணம் நமது நாட்டு மக்கள் வீதிகளை அமைத்தல், கட்டடங்களை எழுப்புதல் ஆகியனவற்றையே அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமது அரசின் இந்த ஒரு வருடகாலம் சற்று வித்தியாசமாகவே முன்னகர்ந்து சென்றுள்ளது. நமது நாட்டுக்குத் தேவையான மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே 19ஆவது சீர்திருத்தம், சுயாதீன ஆணைக் குழுக்கள் ஆகிய செயற்பாடுகள் இவ்வரசினால் முன்னெடுக்கப்பட்டன. எமது சமூகத்தின் மாற்றத்திற்குத் தேவையான, ஆயினும் சிலரின் பரிகாசத்திற்கும் கேலிக்கும் அவதூறுகளுக்கும் காரணமாக அமைந்துள்ள நல்லாட்சியினை ஏற்படுத்துவதன் ஆரம்ப கட்டமாகவே எமது இச்செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. சிலர் கேட்பது போல் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் கண்ணுக்குப் புலப்படக்கூடிய வகையில் அமையவில்லை என்பதையும் எமது வேலைகள் மந்தகதியாகவே நடைபெறுகின்றன என்பதுபற்றி பொதுமக்கள் கூறிவருவதையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
எதனால் இத்தாமதங்கள் ஏற்படுகின்றன? நானும் அமைச்சராக இருந்த எமக்கு முந்திய ஆட்சியானது வீதிகளை அமைக்கின்ற போது அந்த வீதியை அமைக்கப்போவதாகவும் அதைக் குறிப்பிட்ட 3 நிறுவனங்களுக்கு கொடுக்கப்போவதாகவும் அறிவித்து அனுமதி பெற்ற மறுதினமே அந்நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் சுபாவத்தைக் கொண்டிருந்தது. அதேபோன்று எந்தவொரு செயற்றிட்டத்திற்கும் கேள்விப்பத்திரங்கள் கோரப்படுவதுமில்லை. ஆனால் எம்மை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக வாக்களித்தவர்கள் நல்லாட்சியினை எதிர்பார்த்தே வாக்களித்தனர். அதன் முதல் அங்கமாக நிதி முகாமைத்துவம், நிதியை கையாளுவது பற்றிய ஒழுங்குகள் ஆகியவற்றைப் பின்பற்றும் நல்லாட்சியினையே எதிர்பார்த்தனர்.
ஆகையால் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் கேள்விப்பத்திரம் கோரப்பட்டே செயற்படுத்த வேண்டும் என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்துவந்துள்ளோம். மேற்குறிப்பிட்ட தாமதத்திற்கு இதுவே முக்கிய காரணமாகும். அதற்கு மாறாக நாம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் முன்னைய அரசு கடைப்பிடித்துவந்த நினைத்ததை செய்யும் முறையை பின்பற்றியிருந்திருப்போமாயின் நாம் ஆட்சிக்கு வந்த நாள் முதலே அதுவரையில் வழமையில் இருந்துவந்த செயற்பாடுகள் அதே வேகத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆயினும், நாடு எதிர்பார்த்த அந்த உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் உரிய முறையில் செயற்படுத்தும் கொள்கையினையே நாம் உறுதியாகக் கடைப்பிடித்துவந்துள்ளோம்.
மறுபுறத்தில் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் அதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். ஆயினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு முன் நமது நாடு சர்வதேச ரீதியில் எந்த இடத்தில் இருந்தது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நாம் ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தோம். இன்றைய உலகில் எந்தவொரு நாட்டினாலும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி சுயமாக செயற்பட முடியாது. சர்வதேசத்தின் சமூக, பொருளாதார தொடர்புகளை பலப்படுத்தியவாறே நாடு முன்னோக்கி செல்லவேண்டியிருக்கிறது. அந்தவகையில் எமது அரசின் மீதான இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதும் அதுவரையில் எமக்குக் கிடைக்காதிருந்த சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை நாம் பெற்றுள்ளோம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இது கடந்த ஆண்டில் நாம் பெற்றுக்கொண்ட மிகப்பெரும் வெற்றியாகும்.
இன்று உலகில் அத்தனை நாடுகளையும் நாம் எமது நேச நாடுகளாக மாற்றியுள்ளோம். நாம் கண்ணியமான முறையிலும் காத்திரமான முறையிலும் நல்லாட்சியை முன்னெடுத்து வருகின்றோம் என்ற நம்பிக்கையின் பேரிலேயே சர்வதேசத்தின் இந்த ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்துள்ளது. அதனாலேயே சர்வதேச அமைப்புக்கள் பெருமளவுக்கு தமக்கு உதவ முன்வந்திருக்கின்றன. அண்மையில் எமது நாட்டுக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நம் நாட்டின் கல்வி, சுகாதார, வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதியுதவிகளை எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்தார். ஆகையால் நாட்டினுள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதுடன், நிதியொழுக்கத்தைப் பின்பற்றியவாறு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக நாம் மேற்கொண்டுவரும் செயற்றிட்டங்களும் நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதும் நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அத்திவாரத்தை நாம் அமைத்திருப்பதால் உண்மையிலேயே மகிழ்ச்சியடையக் கூடிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை என்னால் கூறமுடியும்.
கேள்வி: நாட்டின் நிலைமை பற்றி மகிழ்ச்சியடையும் நிலைமை பற்றி நீங்கள் குறிப்பிட்ட அதேவேளை பௌத்த பிக்குகளை துன்புறுத்துவதாகவும் பௌத்த மதத்திற்கும் அதன் செயற்பாட்டிற்கும் பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் படைவீரர்களின் கீர்த்திக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான உங்கள் பதில் என்ன?
பதில்: இவ்வேளையில் இந்நிகழ்ச்சியினை பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டு மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். நானும் அமைச்சராகவிருந்த கடந்த ஆட்சியின் முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்த பின்னணியிலும் அவர் எதற்காக தேர்தலை பிரகடனப்படுத்தினார். நீங்கள் கேட்ட கேள்விக்கும் நான் இங்கே கூறிய விடயத்திற்கும் எந்தவொரு தொடர்புமே இல்லையே என ஒருவர் நினைக்கலாம். ஆனால் இன்றுவரை முன்னாள் ஜனாதிபதியோ அவரை சார்ந்த பொறுப்புக்கூறத்தக்க ஒருவரோ தமது ஆட்சியை முன்னெடுப்பதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சியிருந்த நிலையில் எதற்காகத் தேர்தலை ஏன் பிரகடனப்படுத்தினார் என்பதற்கு இதுவரை விடைகூறவில்லை.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி தேர்தலை பிரகடனப்படுத்தாதிருந்தால் முன்னாள் ஜனாதிபதியே தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். ஆயினும் முன்னைய அரசாங்கத்தின் பொறுப்புமிக்க ஒரு அமைச்சராக இருந்த நான் அறிந்தவகையில் முன்னாள் ஆட்சியாளருக்கும் அவரது சகாக்களுக்கும் நம் நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் முகம்கொடுக்க நேர்ந்திருந்த சில முக்கிய சவால்களுக்கு முகம்கொடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. விடைகாணமுடியாத அவ்வாறான பிரச்சினைகளுக்கு விடைகாணும் வகையில் அவசர தேர்தல் ஒன்றை பிரகடனப்படுத்தவேண்டும் என்ற தீர்மானம் அவர்களால் எடுக்கப்பட்டது. முக்கிய பல சம்பவங்கள் பற்றி தற்போது சில விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எக்னெலிகொட சம்பவம், லசந்த விக்ரமதுங்க கொலைச்சம்பவம், ரவிராஜின் கொலை, தாஜுதீன் கொலை ஆகிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
நான் ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன் பல வருடங்களாக மேற்கூறிய சம்பவங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது பற்றி இந்நாட்டு மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. நாட்டு மக்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் ஜெனிவா வரை சர்வதேச மயமானது. இவற்றுக்கான பதில் என்ன என சர்வதேசம் எம்மிடம் வினவியது. அத்தோடு யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டை எல்.டீ.டீ.ஈ. பயங்கரவாதத்திலிருந்து தப்பி வெளிநாடு சென்றிருந்த குழுவினர்கள் பல்வேறு வகையில் சர்வதேசமயப்படுத்தினர்.
அந்தகாலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினால் தொடர்ந்தும் இதுபற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேபோன்று பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடத்தப்பட்ட போது அம்மாநாட்டில் கலந்துகொள்ள பல வெளிநாட்டுத் தலைவர்கள் தயக்கம் காட்டினர். பொதுநலவாய நாடுகளின் சில தலைவர்கள் தமது வருகையை தவிர்த்துக்கொண்டனர். இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் இல்லாத நிலை தோன்றியுள்ளது. ஊழல் மிக்க ஆட்சி நிலவுகின்றது. சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது போன்ற காரணங்களை முன்வைத்த சில அரச தலைவர்கள் நமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொண்டனர்.
சில முக்கிய சர்வதேச தலைவர்கள் நமது நாட்டுக்கு வருகைதந்த போதிலும், நம்நாட்டு பொதுமக்கள் பலரை சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட அவர்கள் நமது நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை துரிதமாக தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கோரினார்கள். ஆக அன்றைய அரசுக்கு நம்நாட்டு மக்களாலும் சர்வதேச சமூகத்தினாலும் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு விடைகூறமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலேயே அவசர அவசரமாக நடத்தப்பட்ட தேர்தலில் 42 நாட்களில் ஆட்சியிலிருந்த ஆட்சியை மாற்றி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாம் ஆட்சிக்கு வந்தோம். அப்படி ஆட்சிக்கு வந்த நாம் கடந்த அரசாங்கத்தினால் விடைகூறமுடியாதிருந்த வினாக்களுக்கு விடையளித்ததுடன், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்காகவே நாம் ஆட்சியமைத்தோம். இதன்போது நாம் எமது அரசியல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தவற்றை நிறைவேற்றுவதே எமது கடமையாகும்.
படைவீரர்களுக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால், சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள வேண்டும். அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மீளும் வகையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை வழங்குவது சரியா? அல்லது எமது நாட்டுக்காக பாடுபட்ட நாட்டின் நற்பெயரை காப்பாற்றிய அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது படையினர் மீது அவதூறுகளை சுமத்துவதற்கு இடமளிப்பது சரியா?
அல்லது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கீர்த்திமிக்க முப்படைகளாக எமது படைகளின் பெயர்களை தக்கவைத்துக்கொள்வதா? யுத்தகாலம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக எமது படையினருக்கு எத்தனை பயிற்சி வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காவால் எமது படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சியினை இழக்க நேரிட்டது. இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பல பயிற்சிகளை இழக்க நேர்ந்தது. எமது புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின் அவ்வாறு இழக்க நேர்ந்த வாய்ப்புகளை மீண்டும் எமது படையினருக்கு பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. உலக தரத்திலான பயிற்சிகளை அனுபவங்களை அறிவினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போது எமது படையினருக்கு கிடைக்கப்பெற்றுவருகிறது. முதலில் நான் குறிப்பிட்ட அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் எந்த ஒரு விசாரணையும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டவையல்ல.
எக்னெலிகொட சம்பவத்தை எடுத்துக்கொண்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவமாகும். ஆகையால் அதன் உண்மை நிலையை அறிவதற்காக விசாரணையினை ஆரம்பிக்க நேர்ந்தது. விசாரணை அவ்வாறு முன்னோக்கி செல்லும் போதே அச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றவகையில் சில அரச படையினர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டிவந்துள்ளது. விசாரணை முடிவில் அப்படைவீரர்கள் குற்றவாளிகளா? சுற்றவாளிகளா? என்பது நிரூபணமாகும். இவ்வாறான சம்பவங்கள் பற்றி நியாயமான விசாரணைகளைக் கோரும் உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் பதிலளிக்கவேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் களங்கமற்ற தன்மையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே ஒரு நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.
இங்கே பௌத்த பிக்குகள் பற்றி நீங்கள் எழுப்பிய வினாவைப் பார்ப்போம். சில பௌத்த பிக்குமார்கள் நீதிமன்றம் செல்ல நேர்ந்த போது அங்கே அவர்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக அவர்களை கைதுசெய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கு அரசாங்கமா குற்றவாளி? அடுத்ததாக சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெளத்த பிக்கு உட்பட இன்னும் பலர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமையை எடுத்துக்கொண்டால் ஒரு கணம் இந்த பிக்குமார்கள் பற்றிய பிரச்சினையை வைத்துவிட்டு இப்பிரச்சினை எங்கிருந்து வந்தது என்பது பற்றி சற்று பார்ப்போம். யானை திருட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டன. இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருக்கும் போது கூட திருட்டு யானைகளை வைத்திருந்த இரு நபர்கள் விசாரணை செய்யப்பட்டு யானைகள் மீட்டெடுக்கப்பட்டதாக வானொலியில் கூறக் கேட்டேன்.
காடுகளில் வாழ்ந்துவந்த இந்த யானைகளை திருடியவர்கள் யார்? அத்திருட்டுக்கு உதவியவர்கள் யார்? அதற்கு ஒத்துழைத்தவர்கள் யார்? அவற்றுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி வனவிலங்குகளை வேட்டையாடுதல், திருடுதல், சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் ஆகிய அனைத்துமே குற்றமாகும். கடந்த காலங்களில் பெருமளவில் யானைகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளிவந்த பின்னணியிலேயே அவ்வாறு திருடி தம்வசம் வைத்திருந்த 37 யானைகள் பல்வேறு நபர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. ஒருபோதும் நமது நாட்டில் நடக்காத சம்பவங்கள் கூட நடந்தன.
வனவிலங்கு அத்தியட்சகர்களிடமிருந்த யானைப் பதிவேடும் காட்டு யானைகளும் கூட திருடப்பட்டன. நான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவியேற்ற நேரம் வரை இந்த ஜனாதிபதி மாளிகையில் கூட இரண்டு யானைகள் இருந்ததே. இவ்வாறான செயல்கள் எந்தளவு சட்டபூர்வமானவை? எந்தளவு நியாயமான செயல்? நான் இந்நாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் காலப்பகுதியில் பௌத்த மதம், பௌத்த விகாரைகளை பலப்படுத்தும் எல்லா விடயங்களையும் மேற்கொள்வேன். பௌத்த தேரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.
நம் நாட்டின் வசதி குறைந்த தூரப் பிரதேசங்களில் சில நேரங்களில் தமது தானத்தைக் கூட பெற்றுக்கொள்ள வழியில்லாத தங்குமிட வசதிகளற்ற பிக்குமார்கள் கூட உள்ளார்கள். ஆகையால் எமது அரசாங்கம் கொள்கை ரீதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில மிக குறைந்த எண்ணிக்கையிலான பௌத்த பிக்குமார்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்குப் பதிலாக இந்நாட்டில் வசிக்கின்ற அத்தனை பிக்குமார்களுக்கும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. அத்தோடு விகாரைகளை பாதுகாக்கும் புதியதோர் அரச நிதியினையும் ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கென கலாநிதி பட்டங்களையும் பேராசிரியர் பட்டங்களையும் பெற்றிருக்கும் பௌத்த பிக்குமார்களைக் கொண்ட தேசிய பிக்கு அறிஞர் மன்றம் ஒன்றையும் அமைத்துள்ளேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலைமை பிக்குமார்களை உள்வாங்கிய பிக்குமார்களையும் ஏனைய மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஆலோசகர் சபையொன்றையும் உருவாக்கியுள்ளோம்.
கேள்வி: இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக நம்நாட்டின் இறைமையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதாகவும் நமது நாட்டுக்கு பாதகமாக அமைகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் செய்துகொள்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதற்கான உங்களது பதில் என்ன?
பதில்: மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஒரு பிரிவினரே அவ்வாறனதொரு குற்றச்சாட்டை எம்மீது சுமத்துகின்றனர். ஆனால் மிகத் தெளிவாக நாம் நமது நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த அமைப்புகளிடமிருந்தும் முன்னேற்றமடைந்த உதவி நாடுகளிடமிருந்தும் எமக்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளுடனும் வர்த்தக தொடர்புகளையும் பேணவேண்டும்.
கடந்த ஒரு வருட காலத்திற்குள் அவ்வாறான பல நாடுகளுக்கான விஜயங்களை நான் மேற்கொண்டேன். எதிர்வரும் மே மாதத்திலும் ஜப்பானில் இடம்பெறும் உலகின் பலம்மிக்க நாடுகளின் ஜீ–7 மகாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு முதல் தடவையாக என்னை அழைத்துள்ளார்கள். அது நம்நாட்டிற்கு மிகவும் சாதகமான ஒரு வாய்ப்பாகும். இந்த நாடுகளுடனான பொருளாதார, கல்விக் கலாசார அம்சங்களில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்தல் எமது நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிகவும் அவசியமானதாகும். இந்த முயற்சிகளை இதற்கு முன்னதாகவும் ஆட்சியில் இருந்தவர்கள் பல தசாப்தங்களாக ஆட்சியிலிருந்தவர்கள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். இருந்தபோதிலும் கடந்த ஓராண்டில் இந்த வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது துரித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்த நாடுகள் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் எம்மை விட்டு விலகியிருந்தன. இந்த நாடுகளின் பொருளாதார, தொழில்நுட்ப, கல்வித் துறை வளர்ச்சிகளை நம்நாட்டு பிள்ளைகளுக்கு நாம் பெற்றுக்கொடுக்கக்கூடாதா? சில நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கைகள் மூலம் எமது நாட்டின் இறைமைக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாதவகையில் அமையவேண்டும் என்பது பற்றி மிக ஆழமாக ஆராய்ந்து அறிந்ததன் பின்னரே நாம் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். நம்நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதே அதன் அடிப்படை நோக்கமாகும். முன்னைய அரசாங்கமே சீபா என்ற உடன்படிக்கையை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்டது. அந்த உடன்படிக்கையிலிருந்த எமது நாட்டுக்கு பாதகமாக அமையக் கூடிய விடயங்களை அகற்றி நமது நாட்டுக்கு சாதகமான ஒரு ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் இப்போது ஈடுபட்டுவருகிறோம்.
இதுவரை அந்த உடன்படிக்கை பற்றிய இறுதி அறிக்கையினை தயாரிக்கவோ, உடன்படிக்கையில் கைச்சாத்திடவோ இல்லை. இருதரப்பு பேச்சுவார்த்தைகளே தற்போது நடைபெறுகின்றன. அதையடுத்து அவ்வொப்பந்தங்களை மேற்கொள்ள முன்னர் அவற்றில் என்ன உள்வாங்கப்பட்டுள்ளன என்பன பற்றி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகின்ற இரு நாட்டு உறவுகளே எமக்கும் இந்தியாவுக்குமிடையே இருந்து வருகின்றன. அதை உணராத சிலரே எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். அப்படிச் செய்கின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் உள்ளனர்.
எமது நாடு இந்தியாவுடனான மிக உயர்ந்த உறவுகளை பண்டாரநாயக்க அம்மையாரினதும் இந்திராகாந்தி அம்மையாரினதும் ஆட்சிக் காலத்திலேயே இருந்துவந்துள்ளது. நேரு குடும்பத்தினருடனும் காந்தி குடும்பத்தினருடனும் பண்டாரநாயக்க குடும்பத்தினரே பேணிப்பாதுகாத்துவந்துள்ளனர். அதனை மிக உயர்வாக வர்ணிக்கின்றவர்கள் இப்போது நாம் பிரதமர் மோடியுடன் முன்பிருந்த பழைய நட்பினை மீண்டும் ஏற்படுத்தி நாட்டுக்கு நன்மை பயக்க முன்வரும் போது இந்தியாவிலிருந்து பொருளியலாளர்கள் வரப்போகின்றனர். வைத்தியர்கள் வரப்போகின்றனர். இந்திய ஊழியர்கள் இங்குவந்து குவிவதால் நம்நாட்டவருக்கு தொழில் வாய்ப்புகள் இல்லாது போகும். கல்விமான்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் இல்லாது போகும் என்றெல்லாம் கூறிவருகின்றனர்.
இப்போது பேச்சுவார்த்தை மட்டத்திலிருந்து வரும் இலங்கை–இந்திய உறவுகளில் இவ்வாறான நாட்டுக்கு பாதகமான எந்தவொரு அம்சமும் உள்வாங்கப்படவில்லை. நாங்கள் அரசாங்கம் அமைத்திருப்பது எமது நாட்டவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை இந்தியர்களைக் கொண்டு இல்லாதொழிப்பதற்காகவா? இவ்வாறான குறுகிய எண்ணங்களுடனான வெற்றுப்பேச்சுகளும் அடிப்படையற்ற வாதங்களையும் எதனால் முன்வைக்கின்றார்கள் என்பது தான் புரியாமல் உள்ளது. இவர்களின் இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்குளுக்கும் குறுகிய அரசியல் நோக்கமே காரணமாகும். ஆகையால் நமது நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை என மிகத்தெளிவாக கூறவிரும்புகிறேன். ஆகையால் எமது இந்த வேலைத்திட்டங்கள் பற்றி விமர்சித்து வருகின்ற புத்திஜீவிகளுக்கு எமது வேலைத்திட்டங்களை தெளிவாக எடுத்துக்கூறி எமது செயற்றிட்டங்களை வெளிப்படையாக செயற்படுத்துவோம் என்பதையும் அவை அனைத்தையும் நாட்டின் நலனுக்காகவே செய்யவிருப்பதாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகையால் எவரும் எந்தவொரு பீதியும் கொள்ளத்தேவையில்லை. ஒருபோதும் நாம் இந்த நாட்டை எவருக்கும் தாரைவார்த்துக்கொடுக்கமாட்டோம் என்பதையும் அதனை செய்ய நாம் ஆட்சிக்கு வரவில்லை என்பதனையும் இந்த நாட்டின் நன்மைக்காக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் நாட்டை முன்னேற்றுவதற்காகவுமே நாம் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.