Saturday, November 23, 2024

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

Must read

sivaஇலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே.

ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதத்தினைப் பார்த்தால், முன்னைய ஆட்சியின் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கு இவர்கள் அருகதையே இல்லாதவர்களாக தெரிகிறார்கள்.

அத்துடன் இவர்கள் குற்றஞ்சாட்டும் ஊடகங்கள், முன்னைய சர்வாதிகார  ஆட்சிக்கு துணைபோனவை எனவும் இனவாதத்தினை தூண்டுகின்றன  எனவும்  கூறி  இவர்கள் தங்கள் ஆவேசமான பகிரங்கப் பேச்சுகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள்.

இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கையின் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க குறைந்தது மூன்று தடவைகளாவது ஊடகங்களைக் கடிந்தும் எச்சரிக்கை செய்தும் விடுத்த செய்திகள் ஊடகங்களிலேயே வெளிவந்துள்ளன. இதேவேளை, இம்மாதம் உயர் கல்வி அமைச்சர், லக்ஷ்மன் கிரியெல்ல செய்தியாளர்களை தூற்றியிருக்கிறார்.

ஆனால் உச்சக்கட்டமாக 16.03.2016 இல் துறைமுக அதிகார சபையின் தலைவர், தம்மிக்க ரணதுங்கவோ உயர் நீதிமன்றத்தில் வைத்து ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு  முயற்சித்துள்ளார்.  மேலும் பாராளுமன்ற சீர்திருத்த மற்றும் பொதுசன ஊடக அமைச்சு இலங்கையிலிருந்து இயங்கும் எல்லா  இணையத்தளங்களும் இம்மாதம் 31ந் திகதிக்கு முன்னதாக  பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அறிவிப்பு ஒன்றினையும் விடுத்துள்ளது.

ஊடகங்களுக்கு முழுச்சுதந்திரமும் வழங்குவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம், முன்னைய  அரசினால் தடைவிதிக்கப்பட்டிருந்த உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இயங்கும் சில இணையத்தளங்களின் மீதான தடையை நீக்கியது, காணாமல்போன, கொலை செய்யப்பட்ட ஊடகவியலார்கள் தொடர்பான விசாரணைகளையும் தொடங்கியது.

ஆனால் தற்போதைய இலங்கையின் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டிலிருந்து இயங்கும்  ‘டெய்லி மிரர்’ போன்ற பத்திரிகையை குறியாய் வைத்து தாக்குவதைப் பார்த்தால், இந்த நடவடிக்கைகள் எல்லாமே வெறும் கண்துடைப்புப் போன்றே தெரிகின்றது.

20 வருடங்களாக ஆட்சி புரிந்த முன்னைய ஆட்சியாளர்களைத் தோற்கடித்ததில் ஊடகங்களே பிரதான பாத்திரத்தை வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. குடும்ப ஆட்சீ, எதேச்சதிகார அரசு, ஊழல்வாதிகள், சிறுபான்மையினங்களின் விரோதிகள் போர்க்குற்றவாளிகள் என்றெல்லாம் தேர்தல் காலங்களில், நிறுவனமயப்பட்ட பெரும்பாலான தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து ஒரு சில தனிநபர்களினால் நடாத்தப்படும் சிறிய வாசகர் பரப்பைக் கொண்ட இணையத்தளங்கள் வரை (ஆனால் இன்று இவ்வாறான இணையத்தளங்களே பதிவு செய்யப்பட்டு அரசின் கண்காணிப்புக்கு உட்பட வேண்டிய நிலை!) வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிட்டார்கள். அதாவது ‘ஆட்சிமாற்றம்’ என்பது தாரகமந்திரமாக ஒலித்தது.

இலங்கையில் நல்லாட்சி செய்யப்போவதாகக் கூறி பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஜனநாயக ரீதியாக பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட போதும் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை (உதாரணம்: ஊடக சுதந்திரம்) முழுமையாக நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலதுசாரிப் பிரிவும் வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சிம்மாசனத்தில் அமர்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாதக்  கூட்டணியும் ஒரு காரணமாகும். இந்தக் கூட்டணிக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டுமென்ற அவா மாத்திரமே இருந்தது. ஆனால் உள்நாட்டு யுத்தம் முடிந்து 6 வருடங்களின் பின்னர் அருமையானதொரு காலகட்டத்தில் இருந்த நாட்டினை அபிவிருத்தி செய்து, முழுமக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டுமென்ற எண்ணம் துளியளவும் இருக்கவில்லை. இப்போதும் கூட அதற்கான ஆக்கபூர்வமான எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஆட்சியின் சில இரகசிய முன்னெடுப்புகள், (தமிழ் தேசியக்கூட்டமைப்புடான உடன்படிக்கைகள், புதிய அரசியலமைப்பு) பழிவாங்கல் அரசியல், ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் போன்றவைகள் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளே, பிரதானமாக ஆட்சியாளர்களின்  ஊடக சுதந்திர முகமூடியை கிழித்தெறிய உதவியது. ஆனால் அதிகாரத்திலுள்ளவர்கள் எப்படித் தாறுமாறாக நடந்தாலும், ஆட்சி மோகங்கொண்டவர்களினதும் அந்நிய சக்திகளினதும் பணத்திற்கு விலைபோய் ஆட்சிமாற்றங்கோரி வாய் கிழியக்கத்திய ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ திருந்துவார்களென்று கூறமுடியாது.

நன்றி: வானவில் இதழ் 63

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article