Wednesday, January 22, 2025

தகவல் அறியும் சட்டவரைவு (RTI) நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Must read

Parliament of Sri Lankaதகவல்களைப் பெற அணுகுவதற்கான உரிமைகளை ஏற்பாடு செய்வதற்கும், அணுகல்கள் மறுக்கப்படக்கூடிய அடிப்படைகளை குறித்துரைப்பதற்கும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை நியமிப்பதற்கும், தகவல் உத்தியோகஸ்தர்களை நியமிப்பதற்கும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் சபையின் அனுமதியைக் கோரி குறித்த சட்டமூலம் வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர்,

“நாட்டின் பிரதமரின் பிறந்தநாள் இன்றாகும். ஆகவே, இந்தத் தருணத்தில் முக்கிய சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்கென சமர்ப்பிக்கின்றேன்” என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
சட்டமூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களைத் தவிர ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவலைப் பெற அணுகுவதற்கான உரிமையை ஒவ்வொரு பிரஜையும் கொண்டிருக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலைப்பெற அணுகுவதற்கான மறுப்பு “தகவலானது, பாரிய பொது அக்கறை அத்தகைய தகவலின் வெளிப்படுத்தலை நீதிமுறைப்படுத்தினாலொழிய அல்லது சம்பந்தப்பட்ட நபர் அத்தகைய வெளியிடுகைக்கு எழுத்தில் சம்மதமளித்திருந்தாலொழிய, ஏதேனும் பொது செயற்பாடு அல்லது அக்கறைக்கு தொடர்புபடாததாகவுள்ள அல்லது தனிநபரின் அந்தரங்கத் தன்மையின் அனுமதிக்கப்படாத வரம்புமீறலைச் செய்யக்கூடிய தனிப்பட்ட தகவல் வெளிப்படுத்தலுடன் தொடர்புபடும் பட்சத்தில் தகவலை பெறும் அணுகலுக்கான உரிமை மறுக்கப்படும்.

 

அதேபோல், தகவல் வெளிப்படுத்தலானது அரசின் பாதுகாப்பை அல்லது அதன் ஆட்புல ஒருமைப்பாட்டை அல்லது தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்திலும், தகவலானது இரகசியமாக தரப்பட்டு அல்லது பெறப்பட்டு உள்ளவிடத்து, ஏதேனும் அரசுடனான அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் சர்வதேச உடன்படிக்கைகள் அல்லது கடப்பாடுகள் தொடர்பில் இலங்கையின் உறவுகளுக்கு பாரதூரமாக பாதகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது அவ்வாறிருப்பதற்கான சாத்தியமிருக்கும் பட்சத்திலும் தகவலறியும் உரிமைக்கான சட்டமூலத்தின் பிரகாரம் தகவல்களைப் பெறுவதற்கான உரிமை மறுக்கப்படும்.
அத்துடன், தகவல் வெளியிடுகையானது, நாணயமாற்று விகிதங்கள் அல்லது கரைகடந்த நாணயமாற்று கொடுக்கல் வாங்கல்களின் கட்டுப்பாடு, வங்கித் தொழில் அல்லது கொடுகடன் ஒழுங்குப்படுத்துகை, வரி விதிப்பு, பணடங்கள் சேவைகளின் விலைகளதும் வாடகைகளதும் வேறு செலவுகளதும் அத்துடன், கூலிகள், சம்பளங்கள் மற்றும் ஏனைய வருமானங்களின் ஸ்திரதன்மை, கட்டுப்பாடு மற்றும் சீர்படுத்துகை அல்லது கரைகடந்த வியாபார உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளுதல் தொடர்பிலான அரசாங்க அல்லது நிதிசார் கொள்கைகளை மாற்றுவதற்கான அல்லது தொடர்வதற்கான காலத்திற்கு முந்தியதான முடிவுகளை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான பங்கத்தை விளைவிக்குமிடத்தும் தகவல்களை பெறுவதற்கான அணுகலுக்கான உரிமை மறுக்கப்படும்” என்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு “தகவலறியும் உரிமை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளையும் இந்த சட்டமூலம் முன்வைத்துள்ளது. இந்த ஆணைக்குழுவானது, அரசமைப்பு பேரவையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 5 நபர்களை கொண்டதாக இருக்கும். அத்தகைய பரிந்துரைகளை மேற்கொள்ளும்போது அரசமைப்பு பேரவையானது, (அ) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், (ஆ) வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் அமைப்புகள் (இ) ஏனைய சிவில் சமூக அமைப்புகள் ஆகிய அமைப்புகள் அல்லது அமைப்புகளின் வகைகள் ஒவ்வொன்றினாலும் பெயர்குறித்து நியமிக்கப்படும் ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும்.
ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருக்க வேண்டிய பணிப்பாளர் நாயகம் ஒருவரையும் அவசியமென கருதும் உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களையும் தகவலறியும் உரிமை ஆணைக்குழு நியமிக்க வேண்டும். தகவல்களை அறிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு வசதியளிப்பதில் பொது அதிகாரசபைகள் மீது இந்தச் சட்டத்தால் இடப்பட்ட கடமைகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிப்பதும் உரியவாறு இணங்கியொழுகப்படுவதை உறுதிப்படுத்துவதும் இந்த ஆணைக்குழுவின் கடமைகள் மற்றும் பணிகளில் ஒன்றாக இருக்கும்.

 

பொது மக்களுக்கு தவகல்களை வழங்குவதன் நிமித்தம் ஒவ்வொரு பொது அதிகார சபையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உத்தியோகஸ்த்தர்களை தகவல் உத்தியோகஸ்த்தர்களாக நியமிக்க வேண்டும். ஏதேனும் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பமுடைய எந்தவொரு பிரஜையும் தாம் கோரும் தகவல் பற்றிய விபரங்களை குறிப்பிட்டு உரிய தகவல் உத்தியோகஸ்த்தருக்கு எழுத்துமூலமான கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும்” என்றும் தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனைகள் சட்டத்தின் விதப்புரைகளின் கீழ் தவறொன்றை புரிந்தவராகக் கருதப்படுபவர், நீதிவான் ஒருவரினால் சுருக்க முறையிலான விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணமொன்றுக்கு அல்லது 2 ஆண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதியொன்றுக்கான மறியல் தண்டனைக்கு அல்லது அத்தகைய தண்டப்பணம் மற்றும் மறியல் தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும் என்று தகவலறியும் உரிமை சட்டமூலத்தில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
அதேபோல், தகவல் உத்தியோகஸ்த்தர் ஒருவரினால் எவரேனும் அலுவலரின் உதவி நாடப்பட்டிருந்தும் நியாயமான காரணமின்றி அத்தகைய உதவியை வழங்குவதற்கு தவறுகின்ற எவரேனும் அலுவலர் இந்தச் சட்டத்தின் கீழ் தவறொன்றை புரிகின்றவராதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் ஒருவரினாலான சுருக்க முறையான விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணமொன்றுக்கு பொறுப்பாதல் வேண்டும் என்றும் அச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க் பிரச்சினையொன்றை எழுப்பினார். “ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக இந்த சட்டமூலம் சிறந்தது என நாம் கருதுகின்றோம். சட்டமூலத்துக்கு சில மாகாணசபைகள் திருத்தங்களை முன்வைத்துள்ளன. அவற்றையும் முன்வைக்க வேண்டும்” என்றார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வருக்கு பணிப்புரை விடுத்தார். இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article