மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களுடன் கொழும்பு மற்றும் சர்வதேச இசைக் கலைஞர்களைக் கொண்ட மியூசிக் மேற்றர்ஸ் இசைக்குழுவினர் இணைந்து நடாத்திய இசை, நாடக மாலை எனும் கலை நிகழ்வானது திங்கட்கிழமை மாலை (21) சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிறுவக இசை மற்றும் நாடகத் துறை மாணவர்கள் மியூசிக் மேற்றர்ஸ் இசைக் குழுவினருடன் இணைந்து கிராமியப் பாடல்களை மேற்கத்தைய இசையில் பாடியிருந்தனர். நாடகத்துறை மாணவர்களால் தயாரித்து நெறியாள்கை செய்யப்பட்ட சகதிப் புழுக்கள் என்ற நாடகமும் நிகழ்த்தப்பட்டது.
இந்நாடகத்துக்கான இசையையும் மியூசிக் மேற்றர்ஸ் இசைக்குழு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர், கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலை போராசியர் சி.மௌனகுரு ஆகியோருடன் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், நாடக கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர்,
பல்வேறு பண்பாடுகள் சார்ந்த விடயங்களை ஒரு களத்தினுள் ஒன்றிணைக்கும்பொழுது பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டியிருக்கும். அதனை உரையாடல்கள் மூலமாக முன்னெடுப்பதன்மூலம் சாத்தியப்படுத்தலாம். அத்தகைய இசைக்கலைகளை காலம்காலமாக முன்னெடுத்துவருபவர்களுடைய இடம் அதில் எதுவென்பது இதில் முக்கியமானது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வானது இசை, நாடக செயற்பாட்டின் கூட்டுமுயற்சியாக அமைந்திருந்ததுடன் வெவ்வேறுபட்ட கலாசார பின்னணியைக் கொண்டவர்கள் தமது மரபுரீதியான இசையை பகிர்ந்து கொண்ட ஒரு கலை நிகழ்வாகவும் அமைந்திருந்தது.