இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கையின் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்று விளங்குபவர் தான் மறைந்த முன்னாள் பிரதமரான தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா. சுமார் 443 வருடங்கள் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த இந்நாட்டுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய போது அதனைப் பொறுப்பெடுத்த பெருைமயும் கௌரவமும் இவரையே சாரும்.
இவ்வாறு சிறப்புப் பெற்று விளங்கும் டி. எஸ். சேனநாயக்கா, போத்தலவில் வசித்து வந்த முதலியார் தொன் ஸ்பெட்டர் சேனநாயக்கா மற்றும் டொன் கத்தரினா எலிசபத் பெரேரா குணசேகர சேனநாயக்கா தம்பதியினருக்குப் புதல்வராக 1883 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பிறந்தார். எப். ஆர் (பிரட்ரிக் ரிச்சர்ட்) சேனநாயக்காவும், டி. சி (தொன் சார்ள்ஸ்) சேனநாயக்காவும் இவரது சகோதரர்களாவர். மரியா பிரான்ஸஸ் சேனநாயக்கா இவரது சகோதரியாவார்.
இவர் தம் ஆரம்பக் கல்வியை முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியில் பெற்றார். அங்கு கல்வியை நிறைவு செய்ததும் நில அளவையாளர் நாயகத் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக அரச சேவையில் இணைந்தார். இருப்பினும் தந்தையுடன் இணைந்து இறப்பர் நடுகையில் ஈடுபட வேண்டி இருந்ததாலும்,குடும்பச் சொத்துகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவராக விளங்கியதாலும் இவர் சொற்ப காலத்தில் அரச சேவையிலிருந்து வெளியேறினார்.
இவர் தம் சொத்துக்களைப் பராமரிக்கும் போதும், பெருந்தோட்ட செய்கையில் ஈடுபட்டிருந்த போதும் கிராம மக்களுடன் நெருங்கிப் பழகினார். அதனால் கிராம மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் அவரால் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது அக்கால கட்டத்தில் மதுப்பழக்கம் காரணமாக கிராம மக்கள் எதிர்கொண்டிருந்த சமூக சீரழிவுகளை அவர் நன்கறிந்து கொண்டார். அதனால் அச்சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் அவர் தம் சகோதரர்களான எப். ஆர். சேனநாயக்காவையும், டி. சி. சேனநாயக்காவையும் இணைத்து மது ஒழிப்பு இயக்கத்தை 1912 இல் ஆரம்பித்தார். இவ்வியக்கத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இவ்வாறான சூழலில் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. அதனால் டி. எஸ் சேனநாயக்கா கொழும்பு நகர காவலராக நியமனம் பெற்றார். என்றாலும் 1915 இல் ஏற்பட்ட சிங்கள – முஸ்லிம் கலவரம் காரணமாக யுத்த கால அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய பிரித்தானியர், எவ்வித குற்றமும் நிரூபிக்கப்படாத டி. எஸ். சேனநாயக்கா மற்றும் அவரது இரு சகோதரர்கள் அடங்கலாகப் பலரைக் கைது செய்து சொற்ப காலம் சிறையில் அடைத்தனர்.
இதனால் டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான மது ஒழிப்பு இயக்கம் அரசியல் இயக்கமாக மாறியது. அத்தோடு நாட்டின் சுதந்திரத்தின் தேவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் இதனூடாக முன்னெடுக்கப்பட்டன. இப்பணியில் ‘இலங்கை பொதுமக்கள் சபை’ என்ற அரசியல் கட்சியும் ஈடுபட்டது. இதன் முன்னணியாளர்களாக டி. எஸ். சேனநாயக்காவும் அவரது சகோதரரான டி.சி.சேனநாயக்காவும் விளங்கினர். இக்காலப் பகுதியில் எப். ஆர். சேனநாயக்கா இலங்கை சுதந்திர இயக்கத்தையும் முன்னெடுத்தார். அவ்வியக்கத்திலும் டி.எஸ். முக்கிய பங்காற்றினார்.
இந்தப் பின்புலத்தில் அன்றைய அரசியல் முக்கியஸ்தர்களாக விளங்கிய சகலரையும் உள்ளடக்கி இலங்கை தேசிய காங்கிரஸ் 1919 இல் ஆரம்பிக்கப்பட்டது. இச்சூழலில் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கை சட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. இப்பேரவைக்கு நீர்கொழும்பின் பிரதிநிதியாக 1924 இல் டி. எஸ். ஏகமானதாகத் தெரிவானார். இதேநேரம் 1925 இல் புத்தகாயவுக்கு சென்றிருந்த எப். ஆர் சேனநாயக்கா காலமானதும் சுதந்திர இயக்கத்தின் தலைமைப் பதவியையும் டி. எஸ். ஏற்றார்.
இவ்வாறான நிலையில் அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்ட பிரித்தானியர், 1931 இல் இலங்கை அரச பேரவையை உருவாக்கினர். அப்பேரவைக்கு இலங்கை தேசியக் காங்கிரஸின் சார்பில் தெரிவான டி. எஸ். சேனநாயக்கா, விவசாயம் மற்றும் காணி அமைச்சராகவும் நியமனமானார். இவர் இந்நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான விவசாயக் கொள்கையையும், காணி மேம்பாட்டு ஒழுங்கு விதியையும் அறிமுகப்படுத்தினார். அத்தோடு விவசாய மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதிலும் இவர் அதிக ஆர்வம் காட்டினார்.
இவ்வாறான சூழலில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான போது யுத்த கால அமைச்சரவை இங்கு உருவாக்கப்பட்டது. அவ்வமைச்சரவையிலும் டி. எஸ். சேனநாயக்கா உறுப்பினரானார். அக்காலப் பகுதியில் உணவு முகாமை மற்றும் விநியோகத்தை செயல் திறனுடன் இவர் மேற்கொண்டார்.
இதேநேரம் உள்நாட்டு அமைச்சராக விளங்கிய சேர் பாரன் ஜயத்திலக்க 1942 டிசம்பர் மாதம் அரச பேரவையிலிருந்து ஒய்வு பெற்றதும், அரச பேரவையின் சபை முதல்வராகவும், அமைச்சரவை உப தலைவராகவும் நியமனம் பெற்றார் டி. எஸ். சேனநாயக்கா. இவ்வாறான சூழலில் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த வெள்ளை மண்டப அறிக்கையை 1943 இல் பிரித்தானியர் வெளியிட்டனர். அமைச்சர்களின் யோசனைகளைத் திரட்டுவதே இதன் நோக்கமாக இருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் சுதந்திரம் தொடர்பாக இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்த டி. எஸ். சேனநாயக்கா அக்காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இருப்பினும் வெள்ளை மண்டப அறிக்கைக்கு எற்ப அமைச்சர்கள் முன்வைத்த யோசனையை பிரித்தானியர் ஏற்றுக் கொண்டதோடு 1945 இல் சோல்பரி ஆணைக்குழுவையும் அமைத்தனர்.
என்றாலும் 1946 இல் தம் அமைச்சு பதவியை இராஜிநாமாச் செய்த டி. எஸ். சேனநாயக்கா, இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்தோடு நாட்டிலிருந்த முக்கிய அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து இதே வருடம் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபித்தார். இதனூடாக இந்நாட்டின் சுதந்திரத்திற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இச்சமயம் பிரித்தானியாவில் குடியேற்ற நாடுகளுக்கான செயலாளர், “சுதந்திரத்திற்கான யோசனைகளை சோல்பரி ஆணைக்குழுவின் ஊடாக முன்வைக்குமாறு டி. எஸ். சேனநாயக்காவுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்கேற்றபடி டி.எஸ். சேனநாயக்கா யோசனை முன்வைத்தார்.
சுதந்திரத்திற்கான அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு இவர் முன்வைத்த யோசனையை பிரித்தானியா ஏற்றுக் கொண்டதோடு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையும் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம், ‘சுதந்திரச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு இலங்கையின் சுதந்திரத்திற்கு வழி செய்வதற்கான உடன்படிக்கையொன்றிலும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி டி.எஸ். சேனநாயக்கா பிரித்தானியருடன் கையெழுத்திட்டார். இதன் பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. அதனால் டி. எஸ். சேனநாயக்கா அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைத்து அரசாங்கத்தை அமைத்தார்.
அதனூடாக இந்நாட்டின் முதலாவது பிரதமரானார் டி. எஸ். சேனநாயக்கா. இதனைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் சுதந்திர நாடொன்றுக்குத் தேவையான அரச நிறுவனங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த டி. எஸ். சேனநாயக்கா விவசாய அபிவிருத்தியிலும் அதிக அக்கறை செலுத்தினார். குறிப்பாக கல்லோயாத் திட்டத்தின் ஊடாக 2 இலட்சத்து 50 ஆயிரம் பேரைக் குடியேற்றினார். அம்பாறையிலுள்ள சேனநாயக்கா சமுத்திரமும் இவர் அமைத்ததேயாகும்.
அத்தோடு அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவையிலுள்ள தொல்லியல் இடங்களைப் புனரமைப்பதிலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். அத்தோடு இலங்கை உலகின் பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவும் வழி செய்த இவர் , இந்நாட்டுக்கு பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொடுத்தார்.
ணஎன்றாலும் இவர் மேற்கொண்ட விவசாயக் குடியேற்றங்கள் குறித்து தமிழ் பேசும் மக்கள் அச்சம் தெரிவித்ததோடு ஆட்சேபனைகளையும் வெளிப்படுத்தினர். அத்தோடு இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை இரத்து செய்யப்பட்டதும் இவரது பதவிக் காலத்தில் தான். நாட்டுக்காக பல்வேறு சேவைகள் ஆற்றி வந்த தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா , 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் திகதி காலிமுகத்திடலில் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்த போது, திடீரென பாரிசவாதம் ஏற்பட்டு தவறி விழுந்து உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைகள் என்றும் நினைவு கூரப்படுபவை என்பதில் ஐயமில்லை.
_Thanks Thinakaran lk-