பரீட்சை மோசடியில் ஈடுபட்டு கத்தோலிக்க மக்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திய நீர்கொழும்பு சாந்த மரியாள் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஜயந்த விக்ரமசிங்க பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்று வந்தவராவார்.
பரீட்சை மோசடி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாட்டை அடுத்து இவர் பாடசாலை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நீர்கொழும்பு வலய கல்வி காரியாலயத்திற்கு இணைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அருட்தந்தை ஜயந்த விக்ரமசிங்க தனது அரசியல் தலைவரான நிமல் லான்ஸாவின் உதவியுடன் ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் பாடசாலை அதிபர் கதிரையில் அமர்ந்த செய்தி ஊடகங்களில் அண்மையில் இடம்பெற்றது.
ஆளுநரின் பணிப்பை அடுத்து அருட்தந்தை ஜயந்த விக்ரமசிங்க நீர்கொழும்பு வலய கல்வி பணிப்பாளரினால் இரவு 8 மணி அளவில் பாடசாலை அதிபர் கதிரையில் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அரசியல் உதவியுடன் மீண்டும் கதிரையில் அமர்ந்த அருட் தந்தை ஜயந்தவுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் உடனடியாக ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கத்தோலிக்க மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திய அருட் தந்தை ஜயந்த தற்போது ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தமது மதத்திற்கும் சமய தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி வந்த அருட்தந்தை ஜயந்தவுக்கு கத்தோலிக்க சபை தற்போது தகுந்த தண்டனையை வழங்கி உள்ளது.
கத்தோலிக்க சபை தலைவர்கள் இதற்கு முன்னதாக அருட்தந்தை ஜயந்தவுக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் எடுக்காமல் இருந்தமை உண்மையில் பிரச்சினையாகும்.