Wednesday, January 22, 2025

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து வட மாகாண மீனவர்கள் ஒன்றினைந்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

Must read


வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து இன்று வியாழக்கிழமை(23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (23)   காலை மன்னாரில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்தனர்.

இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய மீனவர்களின் இழுவை படகுகள்   அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.

மேலும் அண்மையில் வெளிவிவகார அமைச்சர்  இந்திய  படகுகளை இலங்கை கடலில் கடல் தொழில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை 10 மணி அளவில் மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 காலை 10 மணி அளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்   மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள் உள்ளடங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

 காலை 10.30 மணி அளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம்  மன்னார் வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பஜார் பகுதியை   சென்றடைந்தது.

ஊர்வலத்தில் சென்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு  கலந்து கொண்டனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.

மேலும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கினர்.

 மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து   அருட்தந்தையர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையும் கலந்து கொண்டிருந்தார்.

 மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ  நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மீனவர்களில் வாழ்வாதாரத்தையும், வளத்தினையும் ,வருவாயையும் பாதிக்கும் இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி பத்திரம் வழங்குதல் தொடர்பான அமைச்சரின் கருத்து உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள  வேண்டும் எனவும் இது தொடர்பான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்தனர்.

மேலும் வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி  தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு  வழங்கும் வகையில் மன்னார்  மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

S.R. LAMBART
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article