மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாட்டிலே “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்”என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் சனிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன்-கருணாகரம்(ஜனா),மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்,இந்திரகுமார்-பிரசன்னா,அருட்தந்தை ஜோசப் மேரி, தெற்கு ஊடக அமைப்புக்களின் தலைவர் ரீ.பெடிகமகே,சமூக ஆர்வலர்கள்,தமிழ் உணர்வாளர்கள்,மதத்தலைவர்கள் ,பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும்,அதற்கான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தும் மகஜரை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனிடம் கையளித்தார்கள்.இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது
K. vijayareththinam