கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி உண்டு. அதை மாற்றி ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு டிஐஜி என்று நியமிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பில் ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டபடி, கொழும்பு மாநகரத்துக்கு ஒரு டிஐஜியும் 9 மாகாணங்களுக்கு ஒன்பது டிஐஜிக்களுமாக மொத்தம் பத்து டிஐஜிக்கள் நியமிக்கப்படுவார்கள்.ஆனால் இதைச்சொன்ன ரணில் அதன்பின் சொன்ன வார்த்தைகள்தான் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. போலீஸ் அதிகாரத்தில் மாற்றம் இராது என்று அவர் கூறுகிறார். அதாவது இப்போது இருப்பதைப் போலவே போலீஸ் நிர்வாகம் மத்திய அரசுக்குக் கீட்பட்டதாகவே இருக்கும் என்று பொருளா?அப்படியெஎன்றால் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது. அதாவது ரணில் விக்ரமசிங்க கதைப்பது 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா?
அண்மையில் கொழும்புக்கு வந்து போன இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியபடி 13 ஆவது திருத்தம் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதை முழுமையாக அமல்படுத்தும் நோக்கம் ரணிலிடம் இல்லை என்று தெரிகிறது. பிக்குக்களின் ஆர்ப்பாட்டம் அவருக்கு ஒரு சாட்டு. அதைக் காட்டியே அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று கையை விரிக்கலாம். அவர் அப்படிக் கையை விரித்தால் இந்தியா என்ன செய்யும்? 13 ஆவது திருத்தத்துக்கூடாகத்தான் இலங்கை தீவின் இனப் பிரச்சினையில் தான் தலையிட முடியும் என்று இந்தியா கூறிவருகிறது. அங்குதான் தனக்கு சட்டப்படியான உரித்து உண்டு என்றும் இந்தியா வலியுறுத்துகின்றது. ஏனெனில் இந்திய உடன்படிக்கையின் பிரகாரம்தான் இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடலாம் என்றும் இந்தியா கூறி வருகிறது. அப்படியென்றால், 13ஐ ரணில் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் என்றால் அவருக்கு எதிராக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்குமா?
இல்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவ்வாறு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. 13ஆவது திருத்தம் என்பது இந்தியாவும் இலங்கையும் பெற்றெடுத்த குழந்தை.அது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவு.இந்திய-இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கையெழுத்திடவில்லை. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்க வேண்டியது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியாதான்.ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா அதைச் செய்யவில்லை. 2009 க்கு முன்புவரை அவ்வாறு செய்வதற்கு யுத்தம் ஒரு தடை என்று கூறலாம். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அதை அமுல்படுத்தாமைக்கு இலங்கை மட்டுமல்ல,இந்தியாவும் பொறுப்புத்தான்.இதில் இந்தியா தனது கூட்டுப்பொறுப்பை நிறைவேற்றதே தவறியிருக்கிறது.அதன் விளைவாக 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கையில் இரண்டு இனங்களினாலும் கைவிடப்பட்ட ஓர் அனாதையாகும் நிலைதான் காணப்படுகிறது.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கை மீது நிர்ப்பந்தங்களை பிரயோகித்தால் தவிர கொழும்பு அதைச் செய்யாது. இலங்கை இப்பொழுது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.எனவே இந்தியா,இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும்.
ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா.என்ற கேள்வி வலிமையாக மேலெழுகிறது.
கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைச்சர் ஒருவரும் கட்சியின் தமிழகத்திற்கான அமைப்பாளரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கிறார்கள். கலாச்சார மையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்திருந்தபோது அந்த மையம் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகர் வெளியில் திறந்து வைக்கப்பட்டது. அதை ஒரு “மென் திறப்பு” என்று இந்திய தூதரகம் அழைத்தது.
இப்பொழுது கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதாவின் இரண்டு தமிழ் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த கலாச்சார மையத்தை இலங்கை மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது. அதை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கு அவர்கள் தயாரில்லை. அது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பரிசு என்ற அடிப்படையில் அதைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாநகர சபைதான் நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. அவ்வாறு நிர்வகிக்கத் தேவையான நிதி உதவியை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும் இந்தியா தயாராக காணப்படுகிறது. ஆனால் கொழும்பு அதற்கு வெவ்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவதானிக்கப்படுகிறது. அதனால்தான் கலாச்சார மையத்தை கையளிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இப்பொழுதும் அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாமலேயே கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.
கலாச்சார மையத்தை திறப்பதற்கு முதலில் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது. பின்னர் ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியிலும் இறுதியாக வந்தது யார் என்றால் ஒரு துணை அமைச்சரும் பாஜகவின் தமிழக அமைப்பாளரும்தான். அதில் இந்தியா ராஜதந்திர பரிபாஷையில் ஒரு செய்தியை உணர்த்துகின்றது. யாழ்ப்பாணம் வந்த இருவரும் தமிழர்கள் என்பதும் விசேஷம். அதன் மூலமும் இந்தியா இலங்கைக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகிறது. ஆனால் அந்த இருவரும் வந்திருந்த அதே காலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் கடற் தொழில் அமைச்சு ஒரு காரியத்தை செய்தது. அது என்னவெனில், எல்லை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வந்த காரணத்தால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் ஒரு பகுதி தமிழ் மீனவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதையாவது உணர்த்த விரும்பியதா?
கலாச்சார மையத்தைக் கையளிப்பதற்காக வந்திருக்கும் துணை அமைச்சர் மீன்வளத் துறைக்குரிய துணை அமைச்சரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் வடக்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மீனவ சமூகங்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில்தான் இலங்கையின் கடல் தொழில் அமைச்சு மேற்கண்டவாறு இந்திய மீனவர்களின் படகுகளை தானமாக கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகிறது.வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்குள்ள வரையறைகளை உணர்த்துவதே அச்செய்தி ஆகும்.
வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட திட்டங்களை இலங்கை இழுத்தடித்தே அமுல்படுத்தி வருகிறது. பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல மாதங்கள் எடுத்தன.எனினும் ஓடுபாதை போதாது என்ற காரணத்தால் சிறிய ரக விமானங்களைத்தான் இறக்கக் கூடியதாக உள்ளது. அதனால் 27 கிலோகிராமுக்கு அதிகமான ஏடையுள்ள பொதிகளை பயணிகள் காவ முடியாது.
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து இதோ தொடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.ஆனால் அது திறக்கப்பட்ட பின்னர்தான் நம்பலாம். இது போன்ற “கனெக்டிவிட்டி” திட்டங்களில் கொழும்பு வேண்டுமென்றே இழுத்தடிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பின்னணிக்குள் வைத்து பார்க்கும்போது பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்திலும் இலங்கை இந்தியாவின் சொற் கேட்டு நடக்குமா? இந்தியாவும் அதற்காக இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் நிலையில் உள்ளதா?
எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை. 13ஐ அவர்கள் எதிர்ப்பது என்பது கஜேந்திரகுமார் கூறுவது போல இந்திய எதிர்ப்பின் ஒரு பகுதிதான்.அவர்கள் இந்தியாவை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் இந்தியா சிங்களவர்களையும் தமிழர்களையும் சம தூரத்தில் வைத்து கையாளலாம் என்று நம்பிக் கொண்டே இருக்கப் போகிறதா?
theleader.lk