இறுதி யுத்தத்தில் படுகாயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கோரக்கன்கட்டு பகுதியில் தற்காலிக கொட்டகை யில் வசித்து வந்த நல்லையா மதியழகனுக்கு நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் குறித்த வீடு இன்றைய தினம் (10) வைபவ ரீதியாக உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மில்டன் கீன்ஸ் தமிழ் கல்விக் கழகம் ‘தமிழாய் ஒன்றிணைவோம்’ என்னும் தொணிப்பொருளில் அங்குள்ள வர்த்தகர்களின் ஆதரவுடன் இதற்கான நிதி திரட்டப்பட்டு வன்னிமண் அறக்கட்டளையின் ஊடாக மதியழகனுக்கு இவ் வீடு அமைக்கப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டு இன்றைய தினம் மதியழகன் இல்ல திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.இத் திறப்பு விழாவிற்கு மில்டன் கீன்ஸ் தமிழ் கல்வி கழகத்தின் உறுப்பினர் தயாபரன் கலந்து சிறப்பித்தார்.
வன்னி மண் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமூக சேவகர்கள் , கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கிராமத்தவர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
(மன்னார் நிருபர்)