Thursday, November 21, 2024

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மு.கோகிலதாசனுக்குப் பிணை

Must read

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் வயது(38) நேற்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதி வழங்கியது.அவர் தனது சொந்த பெயர் பொறித்த முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் (கார்த்திகை-27) அடங்கிய  புகைப்படங்களை   பதிவிட்டார் என்பதன் அடிப்படையில் இவர் 28.11.2020 ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாழைச்சேனை மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.இவர் கடந்த ஒருவருடமும் 4 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன், ஹாலிப் றிபான் அகியோர் இவ் வழக்கில் ஆஜராகியிருந்தனர். மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் சார்பாக வழக்குகளில் ஆஜராகிவந்த சட்டத்தரணி தங்கமுத்து ஜெயசிங்கம் தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் ஆஜராகியிருக்கவில்லை. மு.கோகிலதாசன் சார்பில் கொழும்பில் உள்ள மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனைக்  குழுவின் முன்னால் மனு சமர்ப்பித்து விடுதலையைக் கோரியது. இம்மனுவை பரிசீலித்ததன் பின்னர் விடுதலை செய்வதற்கு அல்லது  பிணையில் விடுவிப்பதற்கு தீர்மானித்திருந்தது. சந்தேகநபர் சார்பில் சட்டமா அதிபர் திணைகளம், ஆலோசனைக்குழு முன்னிலையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் மற்றும் ரனித்தா ஞானராசா கோயோர் ஆகியோர் ஆஜராகினர்.மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனைக்  குழுவின் முன்னால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை சமர்ப்பித்தன் விளைவாக இதுவரை 26பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 
இதன் விளைவாக சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்திற்கும் பொருத்தமான மன்றுகளுக்கும் ஏற்ற  பணிப்புரைகளை விடுத்திருந்தது. இதன் பிரகாரம் நேற்றைய தினம் (07.03.2022) இவ்வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அளிக்கப்பட்ட அறிவுரைக்கமைய மு.கோகுலதாசனை பிணையில் விடுவித்தார். குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 03.06.2022ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் மு.கோகிலதாசன்  இணையதளம் மற்றும் சமூக வலைத் தளங்களில் செய்திகளை அறிக்கையிட்டு வந்தவர். இதேவேளை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினரால்  பல தடவைகள் விசாரணகளுக்குட்பட்டுமிருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 இல் கைது செய்யப்பட்டு  மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபையில் கிண்ணையடி வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார். அரசியல் பழிவாங்கல் காரணமாக இவரது கைது இடம்பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.ஆரம்பத்தில் இவருடைய வழக்கில் சட்டத்தரணிகளான சஞ்சய வில்சன் ஜெயசேகர, சுவஸ்திகா   பல்வேறு வகைகளில் சட்ட உதவிகளை வழங்கியிருந்தபோதும் பின்னர் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஊடாக விடுதலைக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மு.கோகுலதாசன் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர் மு.கோகிலதாசனின் விடுதலைக்காக, ஊடகவியலாளர் அமைப்புக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ருத்ரா

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article