இன்று முற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது ஊடகவியலாளரான இலட்சுமணன் பிரதீபன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
திடீர் விபத்து ஒன்றில் மரணமான சமூக சேவையாளர் ஒருவரின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட பஸ் தரிப்பிடம் ஒன்றை உடைத்து நாசப்படுத்தியமைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஊடக இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர்
வந்துள்ளனர்.
இவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் இதனை படம்பிடித்துள்ளார். இதன்போது உத்தியோகத்தர் ஒருவர் ஊடகவியலாளரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தேவப் பிரதீபன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பஸ் தரிப்பிடம் சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சரின் ஆதரவாளர்களால் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அமரர் கே. பாஸ்கரின் உறவினர்கள் இதற்கு எதிராக இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் ஐபிசி ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஆவார்.