தொல்பொருள் என்ற ரீதியில் கன்னியாவிலிருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிப்பு – (பாராளுமன்ற உறுப்பினர் – ஜனா)
கிழக்கில் இன்னும் அதிகமாக சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைபப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கிலே இடம்பெற்ற வரும் காணி அபகரிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருக்கின்றோம்.
வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொல்பொருள் திணக்களம் போன்ற திணைக்களங்களினால் வடக்கு கிழக்கிலே தனியார் காணிகளும், எதிர்காலத்தில் அம்மக்களின் அபிவிருத்திக்காக இருக்கக்கூடிய அரச காணிகளும் மத்திய அரசினால் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களின் எல்லைப் புறங்களிலும் வெளி மாவட்ட சிங்கள மக்களைக் கொண்டு குடியேற்றும் திட்டமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர் தாயகமாகக் கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இணைந்திருந்த வடக்கு கிழக்கை தற்காலிகமாகப் பிரித்தது மாத்திரமல்லாமல் அதனை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக மகாவலி தண்ணீர் செல்லாத இடத்தில் மகாவலி எல் வலயமென்று ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமைக்கின்றார்கள். அத்துடன் மணலாறு என்ற பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றி அதனை இன்னுமொரு சிங்கள மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கை விட கிழக்கில் இன்னும் அதிகமாக சிங்கள மக்களைக் கூடுதலாகக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகினறன.
கிழக்கு மாகாணத்தில் கூடுதலாகத் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரங்களிலே சேனைப்பயிர்ச் செய்கை, மரமுந்திரிப் பயிர்ச்செய்கை என்ற போர்வையிலே இலங்கை அரசாங்கம் கிழக்கு ஆளுநர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் அனுசரணையுடன் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த எல்லைப் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அங்கு ஜீவனேபாயத் தொழிலை மேற்கொள்ளும் பண்ணையாளர்களின் மேய்ச்சற் தரைக் காணிகள் கூட அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பால் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மாடுகளை பண்ணையாளர்கள் எதிர்காலத்தில் விற்கும் ஒரு நிலைமையை தான்இந்த அரசாங்கம் உருவாக்குகின்து. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அந்தப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்துவிடும். இதன் மூலம் அவர்களை மேலும் வறுமைக் கோட்டின் கீழ் இட்டுச் செல்லவே இந்த அரசாங்கம் முனைகின்றது.
எனவே இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கில் நடத்தும் காணி அபகரிப்புகளை உடன் நிறுத்த வேண்டும். தமிழர்களது குடிப்பரம்பலைக் குறைப்பதனை நிறுத்த வேண்டும். நீண்டகாலமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக நாங்கள் போராடிக் கொண்டு வருகின்றோம். அந்த வகையிலே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதற்கு இந்த அரசாங்கம் மட்டுமல்லாது சர்வதேசமும் இன்றைய ஆர்ப்பாட்டத்தைக் கருத்திற்கொண்டு தமிழர் பிரதேசத்திற்கு, வடக்கு கிழக்கிற்கு, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது அவா என்று தெரிவித்தார்.