நிரந்தர நியமனம் மற்றும், சம்பள உயர்வினைக்கோரி கரைதுறைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை.
முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்புச்செய்து நிரந்தர நியமனம் வழங்குவதுடன், சம்பள அதிகரிப்பையும் செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று கோட்டத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் 21.02.2022 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், 6000ரூபாய் வேதனம் முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் போதுமானதா?, எம்மை அங்கீகரித்து நிரந்தர நியமனம் தாருங்கள், போதாது போதாது 6000ரூபாய் போதாது, நியாயமான சம்பளத்தைத் தா.. தலைநிமிரவைப்போம் மாணவர்களை, பொருட்களின் விலை அதிகரிப்பு முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு 6000??, வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வழிசெய்யுங்கள், அடிக்காதே அடிக்காதே முன்பள்ளி ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்காதே, முன்பள்ளிக் கல்வி முக்கியம் முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கியமில்லையா?, ஆரம்பக்கல்விக்கு அடித்தளமிடும் எமக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவு என்ன, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இந் நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம், முன்பள்ளி ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளையும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முன்வைத்ததுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதனிடம் கையளித்திருந்தனர்.
அதேவேளை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உரிய தரப்பினருக்கு அனுப்ப தான் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.
மேலும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு பங்குத்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அடிகளார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், செல்வபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திலீபன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Shanmugam Thavaseelan |