லசந்தவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் திங்கட்கிழமை(10) தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இது விடமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகளை கடந்துள்ள போதும் இன்றுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் இனிமேலும் இலங்கையில் நீதி நிலை நாட்டப்படுவதென்பது சந்தேகமே நாட்டில் மாறி மாறி வரும் ஆட்சியாளர்களால் கொலைக் குற்றவாளிகள் தொடர்ச்சியாகவே ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் காப்பாற்றப்படுகின்றார்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்று கடந்த காலங்களில் நாட்டில் பல நேர்மையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அதிகமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவர்களுடைய படுகொலைகளுக்கும் இன்றுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதனுடாக சிறீலங்காவில் ஜனநாயகம் துளியளவு கூட இல்லை என்பது தெரிகின்றது.
நாட்டில் படுகொலைகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் முன் வெறும் கண்துடைப்புக்காக கொலை தொடர்பில் விசாரிப்பதற்கு விசாரணைக் குழு அமைத்திருக்கின்றோம் அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படும் என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
இதுவரை காலமும் நடந்த படுகொலைகளுக்கான விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் எந்த கொலைக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஜனநாயக சோசலிச குடியரசு என்று கூறப்படுகின்ற எமது நாட்டில் ஜனநாயகம் என்ற ஒரு சொல் தேவை தானா என்று நாம் இந்த ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்புகின்றோம்?
இந்த நாட்டின் நீதித்துறை என்பது சிறு குற்றங்களைப் புரிந்த அப்பாவிப் பொதுமக்களிடம் இருந்து தண்டப்பணத்தை அறவிடும் விதத்திலேயே தொடர்ந்தும் செயற்படுகின்றதே தவிர கொலையாளிகளையும், கொள்ளைக்காரர்களையும் சுதந்திரமாக அரச பாதுகாப்புடன் திரிவதற்கு மறைமுக ஆதரவை கொடுத்திருக்கின்றது என்பது நிதர்சனமான ஒன்றாக காணப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கும் படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நாடு கடந்து சர்வதேச அரங்கிலாவது நிச்சயமாக நீதி கிடைக்கவேண்டும் அந்த நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.