சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வெளிக்கொணருபவர்கள் ஊடகவியலாளர்கள், ஆனால் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படாமலுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியமும், இணைந்து மனித உரிமையும், ஊடக சுதந்திரமும் எனும் தொணிப் பொருளின் கீழான நிகழ்வு நேற்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், அதற்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொள்வது சக ஊடகவியலாளர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவ்வாறில்லாமல் ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றபோது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமய சமூகத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து அதற்கு முகங்கொடுக்க வேண்டும்.
அப்போது தான் மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்பும் ஊடகவியலாளர்களையும் மேம்படுத்த முடியும். நாளுக்கு நாள் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பயந்து ஊடகவியலாளர்கள் ஒதுங்குவார்களேயானால், உலகத்திற்கு உண்மையான கருத்துக்களை முன்வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பல பிரயத்தனங்கள் வரலாம், எனவே ஊடகவியலாளர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இடையிலான ஒட்டுறவை இன்னும் பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிங்கள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன் முதல் நிகழ்வாக பி.ப 02.00 மணிக்கு இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகேயினால் இணைய வழி ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
பின்னர் மாலை 4 மணிக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்ததாகக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது மனித உரிமைகள் தொடர்பாகத் திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் ராதா ஞானரெட்னம், மனித உரிமையும் முஸ்லிம் சமூகமும், எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் ஊடகவியலாளருமான முகமட் இஸ்மயில் பாறுக், பெண் உரிமை தொடர்பில் சேதிஸ்வரி யோகதாஸ், மனித உரிமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய முன்னாள் இணைப்பாளர் இ.மனோகரன், மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.
பின்னர் மாலை 6.00 மணியளவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் , ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்து, காந்தி பூங்கா மட்டக்களப்பு முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி சுடர் ஏற்றி நினைவு கூர்ந்ததுடன் நிகழ்வு நிறைவுற்றது.