காணி வழங்குவது தொடர்பான முறையான நடவடிக்கைகளுக்காக குறைந்தது ஐந்து மாதகாலம் செல்லும் எனவும் உங்களது விபரங்களின் அடிப்படையில் உங்களுக்கு காணிவழங்க வேண்டியுள்ளதை நன்கு அறிந்துள்ளேன் எனவே ஐந்து மாத கால அவகாசம் வழங்குமாறும் அதற்குள் உங்களுக்கான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் அவர்கள் உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து வேணாவில் மக்கள் ஆரம்பித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் வேணாவில் கிராமத்தில் காணி கோரி வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சுமார் 16 பேர் தமக்கு உறவினர்களின் காணிகளில் தொடர்ந்தும் வாழ வளியின்றி தமக்கான காணிகள் வழங்க கோரி வீதிக்கு வந்து வீதியோரத்தில் அரச காணி ஒன்றில் 16 பேரும் தனித்தனி கொட்டில்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
குறிப்பாக தமக்கான வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச காணிக்கிளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் தமது கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றில் வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து காணி கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
சிறிய குழந்தைகளுடன் வீதிக்கு வந்த இவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த குடும்பங்களை போராட்டம் செய்ய முடியாது என கொரோனாவை காரணம் காட்டி குறித்த இடத்தை விட்டு செல்லுமாறும் வரும் திங்கள்கிழமை பிரதேச செயலகத்துக்கு தங்களை அழைத்து சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் இவர்களை கலைந்து செல்லுமாறும் கோரினர்
இருப்பினும் குறித்த மக்கள் பிரதேச செயலாளர் வருகை தந்து தமக்கான உத்தரவாதம் வழங்கவேண்டுமென தொடர்ந்தும் போராடி வந்தனர் இந்நிலையில் உறவுகள் தமது போராட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக குறித்த இடத்தில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தினர் இதன்பின்னர் உறவுகள் தமக்கான மத்திய உணவை தயாரித்து வைத்திருந்த நிலையில் மூளவும் குறித்த இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து கொரோனாவை காரணம் காட்டி மக்களை அச்சுறுத்தியதோடு நீதிமன்றில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டி குறித்த இடத்தில் வருகைதந்திருந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளையும் போலீஸ் நிலையம் வருகைதந்து வாக்குமூலம் தருமாறு குறித்த இடத்தில் இருந்த இளைஞர்கள் சிலரை கைது செய்வதாகவும் மிரட்டினர்
இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்ற இடங்களில் கொரோனா தொடர்பில் கண்டுகொள்ளாத பொலிசாருக்கு எமது போராட்ட இடத்தில் மட்டுமா கொரோனா வரும் எனவும் காணி வீடு இல்லாமல் இருப்பதை விட இதிலேயே கொரோனா வந்து சாகிறோம் என பொலிஸாருக்கு தெரிவித்தனர் நிலைமைகளை பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் சம்பவ இடத்துக்கு வருகைதருவதாக உறுதியளித்துள்ளார் இந்நிலையில் உறவுகள் வீதியோரத்தில் இருந்து உணவருந்துவதோடு தொடர்ந்தும் போராடி வந்தனர்
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குறைகளை ஒவ்வொரு குடும்பங்களாக கேட்டறிந்துகொண்டார் அதனை தொடர்ந்து அவர்களின் நிலைமைகளை புரிந்து கொள்வதாகவும் காணி வழங்குவது தொடர்பான முறையான நடவடிக்கைகளுக்காக குறைந்தது ஐந்து மாதகாலம் செல்லும் எனவும் உங்களது விபரங்களின் அடிப்படையில் உங்களுக்கு காணிவழங்க வேண்டியுள்ளதை நன்கு அறிந்துள்ளேன் எனவே ஐந்து மாத கால அவகாசம் வழங்குமாறும் அதற்குள் உங்களுக்கான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்
இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் குறித்த மக்கள் தமது போராட்டத்தை நிறுத்தி தாம் அமைத்த கூடாரங்களை கழற்றிக்கொண்டு குறித்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்
சண்முகம் தவசீலன்