வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை (02) முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன், கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் நேற்றும் மழை தொடர்ச்சியாக பெய்த நிலையில் இன்றையதினம் (04) சற்றுக் குறைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இவ்வாறு கன மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர்ப் பகுதிக்குள் நுழைவதற்கு அண்மையாக உள்ள சின்னாற்றுப்பாலத்தில் நீர் நிறைந்துள்ள நிலையில் கடலுக்கு அது வெட்டிவிடப்படாத நிலையில் குறித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு இருந்தது.அத்தோடு நகருடன் அண்டிய குடியிருப்புக்கள் பல வெள்ளத்தில் மூழ்கியதோடு வயல் நிலங்கள் பலவும் முல்லைத்தீவு நகர பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நீர் தேங்கி நின்றது. இதனால் .குறித்த பகுதி நீரை வெட்டி கடலுடன் விடுவதற்கு மக்கள் முயன்றபோது கடல் நீர் உள்ளே வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்து பொலிஸார் அதை தடை செய்திருந்தனர். இதுதொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கும் வரை வெட்டிவிடவேண்டாம் என்றனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த முகத்துவாரத்தை வெட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு இறுதியாக அப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் எதிர்ப்பக்கத்தில் உள்ள வயல்களின் நிலை கருதி கடல் நீர் உட்புகாதவாறு மண் அணைகள் அமைக்கப்பட்டு மேலதிக நீரை கடலில் சேரவிட்டு பின் அதனை அடைத்து விடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் குறித்த பகுதி வெட்டிவிடப்பட்டுள்ளது