மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டிருப்புக் கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி பஸ் தரிப்பு நிலையத் திறப்பு விழா இன்றையதினம் நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டிருப்பு மாணிக்கப் பிள்ளையார் கோவிலிலிருந்து களுவாஞ்சிக்குடி பிரதான வீதி வரை மக்கள் பேரணியாகச் சென்றனர். இதன்போது, பஸ் தரிப்பு நிலையத் திறப்பு விழாவைத் தடுப்பதற்கு முற்பட்ட வேளையில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த இடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டக்கார்களைக் கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டனர். இருப்பினும், ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பஸ் தரிப்பு நிலையம் பட்டிருப்புக் கிராம மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், ‘மேற்படி பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி, எமது கிராமத்துக்குச் சொந்தமானது. பட்டிருப்புக் கிராமத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், எமது எல்லைப் பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்கு களுவாஞ்சிக்குடியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது’ என்றனர். http://www.supeedsam.com