
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று செவ்வாய்கிழமை இரவு ஒன்பது 45 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் கேள்வியுற்று செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் மீதே சிவில் உடையில் நின்ற இராணுவ கேணல் என தன்னை கூறிக்கொண்ட ஒருவர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, ஊடகவியலாளரின் கையில் இருந்த புகைப்பட கருவியையும் பறித்தெடுத்து அதில் இருந்த புகைப்படங்களையும் அழித்துள்ளதோடு, கமராவின் கைப்பட்டியை பிடித்து வீதியில் அடிக்கவும் முற்பட்டுள்ளார் இதன் போது கமராவின் லென்ஸ் பகுதி சேதமாகியுள்ளது.
நேற்றிரவு இராணுவ நீர்தாங்கி வாகனம் ஒன்றும் தானியார் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனை செய்திடச் சென்ற ஊடகவியலாளர் விபத்துச் சம்பவத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இதன் போதே ஊடகவியலாளருக்கு அருகில் வந்து தன்னை இராணுவ கேணல் என கூறிக்கொண்ட ஒருவர் ஊடகவியலாளரின் கையில் இருந்து கமராவை பறித்தெடுத்ததோடு அதிலிருந்து புகைப்படங்களையும் அழித்ததோடு கமராவை நிலத்தில் அடிக்கவும் முற்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் தான் ஒரு ஊடகவியலாளர் என ஊடக அடையாள அட்டையை காட்டிய போதும் நீ யாராக இருந்தால் என்ன எனக் கூறியப்படியே தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
குறித்த சம்வம் தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளர் நேற்றிரவே கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார், பூநகரி பொலீஸ் பிரிவுக்குள் வருகின்ற சம்பவம் என்பதால் தகவலை அங்கு அனுப்பி மூன்று நாட்களுக்கு முடிவு சொல்வதாக கிளிநொச்சி பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் குறுகிய காலத்திற்குள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட இராண்டாவது சம்பவம் இதுவாகும்.
குறித்த விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்த நிலையில் 23 வயதுடைய இராணுவ சிப்பாய் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.