Thursday, March 28, 2024

இன்றைய சர்வதேச ஊடகத் தினம் வரை ஊடகவியலாளர்களின் நிலை? – வி.தேவராஜ்

Must read

World Press Fredom Day - Supeedsamஇலங்கையில் ஊடகத்துறை சார்ந்தோருக்கு இந்த தினம் ஊடக சுதந்திரத்தை கொண்டாடும் தினமாக மட்டுமன்றி கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு மரணித்த ஊடக ஆன்மாக்களை கனத்த இதயத்துடன் நினைவு கூரும் ஒரு தினமாகவே மே 03ம் திகதி அமைந்து விட்டது.

ஊடக ஜாம்பவான் தராக்கி என்றழைக்கப்படும் தர்மரெத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 11வது ஆண்டு நினைவு தினம் கடந்த 29ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் ஊடகத்துறை தமது சகாக்களின் மரணங்கள் தருகின்ற வலியுடன் கூடிய கனத்த இதயத்துடன், சோகத்தில் மூழ்கிய நிலையிலேயே ஊடகத்துறை மே 03ம் திகதியை நினைவு கூறுகின்றது.

றிச்சட் டி சொய்சா முதல் லசந்த விக்கிரமதுங்க வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகத்துறை சகாக்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புகளைப் பேணிய சந்ததியையே இன்றைய ஊடகத்துறை கொண்டிருக்கின்றது. புதிதாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த புதியவர்கள் கூட படுகொலை செய்யப்பட்ட ஊடகத்துறையினரை அறிந்தே வைத்துள்ளனர்.

இதேபோல், தமிழ் ஊடகத்துறையில் தராக்கி சிவராம், நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜ் சுப்பிரமணியம் என குருதிச்சேற்றுக்குள் புதைக்கப்பட்ட பல தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகத்துறைக்கு நன்கு பரீச்சயமானவர்களே. குறிப்பாக தராக்கி சிவராம் இவர்களிலிருந்து விதி விலக்கானவர். இவர் ஆங்கில, தமிழ் ஆகிய இரு வேறுபட்ட ஊடகத்துறைக்கும் பரீச்சயமானவர்.

1981ம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை ஊடகத்துறை சார்ந்தோர் 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சீதா ரஞ்சனி தனது நூலில் பதிவு செய்துள்ளார். இவர்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் எனப் பட்டியல் நீண்டு செல்கின்றது.

1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2010ம் ஆண்டு மே மாதம் வரை அதாவது 11 ஆண்டுகளில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது.

முதலாவது கொலை யாழ் குடா நாட்டில் இடம்பெற்றுள்ளதாக சீதா ரஞ்சனி தனது நூலில் பதிவிட்டுள்ளார். புகைப்பட ஊடகவியலாளரான நவரத்தினம் 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி சுண்ணாகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கிடைக்கப்பட்ட தகவல்களின்படி யாழ் குடா நாட்டில் மாத்திரம் ஊடகத்துறை சார்ந்தோர் 21 பேர் அளவில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் பெரும்பாலும் தமிழ் ஊடகத்துறை சார்ந்தோரே “இனந்தெரியாத” கைக் கூலி கொலைகாரர்களுக்கு இலக்காகினர். அவ்வேளையில் தான் தமிழ் ஊடகத்துறையினர் மீது பயங்கரவாத முலாமும், புலிச்சாயமும் பூசப்பட்டு தமிழ் ஊடகத்துறையில் உயிரிழந்தோர் கொச்சைப்படுத்தப்பட்டனர்.

அவ்வேளையில் இன்று எமக்கு நாளை உங்களுக்கு என்ற எனது கட்டுரையின் வாசகம் நிதர்சனமாகி தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் குறிப்பாக சிங்கள ஊடகவியலாளர்கள் குறி வைக்கப்பட்டு சாய்க்கப்பட்டனர்.

இனந்தெரியாத கைக் கூலிகளினதும் இவர்களுக்குப் பின்னால் நின்று இவர்களை இயக்கியவர்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்றே சிந்தித்துச் செயலாற்றினர். ஆனால் ஊடகத்துறை தமக்கிடையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பிளவுபட்டுக் கிடந்தது. இந்தப் பிளவு இன்றும் கூட ஊடகத்துறையில் கோலோச்சி வருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

போர்க் காலங்களில் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் ஊடகவியலாளர்கள் குறி வைக்கப்பட்டபோது ஊடகத்துறையினருக்கே ஒரு சில செய்திகள் மிகத் தெளிவாக அந்த கொலைகளின் மூலம் உணர்த்தப்பட்டது.

எழுதுவதை நிறுத்துங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுங்கள் அல்லது ஊடகத்துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த செய்திகளாக இருந்தன.

இந்த செய்திகளையும் மீறி பேனாவைத் தூக்கியவர்கள் கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். பெருமளவினர் நாட்டைவிட்டு வெளியேறினர். மற்றும் பலர் ஊடகத்துறையிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டனர்.

இத்தகைய நெருக்கடிக்குள்ளும் ஊடக பயணத்தை மேற்கொண்டு ஊடக பயணத்தை தொடர்ந்தவர்கள் ஒரு சிலர். இனந்தெரியாதோரினதும் அவர்களுக்குப் பின்னால் நின்றவர்களும் ஊடகத்துறை சார்ந்தவர்களை முடக்க முனைந்த போதும் முற்று முழுதாக அவர்களுடைய செயல்கள் வெற்றி பெறவில்லை.

எனினும், இந்த யுகம் முடிந்து விட்டது என்பது அர்த்தமல்ல என்பதை ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும் அறிவர்.

இனந்தெரியாத நபர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்த சக்திகள் இன்றைய போரற்ற காலத்தில் மௌனமாகி போனதாகக் கொண்ட போதும் அந்த இடத்தை வெளிப்படையாகவே அரசியல் தலைமைகளும் அவர்களுடைய சித்தாந்தங்களுக்குத் துணை போகும் ஊடகக் காவலர்களும் தத்தெடுத்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசியத்தை வர்த்தகப் பொருளாக்கி தமிழ் ஊடகத்துறை நிறுவனங்கள் சுகம் கண்டன. தமது இலாப நோக்கிற்கு தமிழ்த் தேசியம் அவர்களுக்குத் தேவைப்பட்ட காலம் அது. ஆனால் இன்று தமிழ்த் தலைமைத்துவங்களுக்கும் ஊடகக் காவலர்களுக்கும் தமிழ்த் தேசியம் என்பது தேவையற்ற ஒன்றாக அல்லது தமது சித்தாந்தத்துக்குள் அரசியல் நலனுக்குள் இசைந்து போவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அதனை நோக்கியதாக தமது செயற்பாடுகளையும் வடிவமைத்துள்ளனர். எனவே தான் போர்க் காலத்தில் தப்பிய எழுத்துக்கள் சமாதான காலத்தில் முடக்கப்பட காரணமாகியுள்ளன.

இந்தப் போக்கு இன்று தமிழ் ஊடகத்துறையில் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகின்றது என்பது தமிழ் ஊடகத்துறையினருக்கு தெரிந்த ஒரு விடயமாகும். இத்தகைய போக்கிற்கு இசையாதவர்கள் ஒன்றில் தூக்கப்படுகின்றனர் அல்லது பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்படுகின்றனர்.

மறுபுறம் சிங்கள ஊடகத்துறைக்கு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒரு போக்கினைக் கொண்டிருந்த அதே வேளையில் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் எதிரான ஒரு போக்கினை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதானது பெரும் இலாபம் தரும் துறையாகச் சிங்கள ஊடகத்துறையை மாற்றியமைத்தது.

போருக்குப் பிறகு கூட இந்தப் போக்கில் தளர்வு ஏற்பட்டதாகக் கொள்வதற்கில்லை. ஆங்காங்கே நியாயத்திற்காகவும் நீதிக்காகவும் சிங்கள ஊடகத்துறையில் பேனாக்கள் வீறு கொண்டு எழுந்த போதும் அது பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய நிலையில் இல்லை.

தமிழ் ஊடகத்துறை ஒரு புதிய பரிணாமத்தை பெற்றுக் கொள்வதற்கு அடித்தளமிட்டவர் தராக்கி சிவராம். ஒரு போராளியாக இருந்து பேனா போராளியாக அவர் உருவெடுத்த போது தமிழ் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு நோக்கில் தனது எழுத்துக்களை மாத்திரமல்ல தமிழ் ஊடகத்துறையினருக்கும் ஒரு புதிய இரத்தத்தை பாய்ச்சினார்.

இன்று பல துறைகளில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் ஊடகத்துறையினருக்கு வழி சமைத்துக் கொடுத்தவர் தராக்கி சிவராம்.

“மண்டையில் போட்டு கொன்று விடுவார்கள். ஆனால் எப்பொழுது போடுவார்கள் என்பது தெரியவில்லை” என்ற வாசகத்துடன் மரணத்தை எதிர் நோக்கியிருந்த நிலையிலும் தனது எழுத்துக்களைத் தொடர்ந்தவர் நண்பர் சிவராம். ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தமிழில் வெளிவந்த மாற்றுப் பத்திரிகைகளிலும் எழுதி வந்த சிவராமை தேசியப் பத்திரிகையில் எழுத வைப்பதற்கு எனக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன.

இறுதியில் அவர் எதனை எதிர்பார்த்து எழுதிக் கொண்டிருந்தாரோ அது அவருடைய மண்டையில் போடுவது நிதர்சனமாகியது. இன்று அவர் எம்மிடம் இல்லை. அதே போல் அவருடைய இடமும் வெற்றிடமாகவே உள்ளது.

மற்றுமொரு பத்திரிகையாளர் மரணத்தை எதிர்பார்த்த வேளையிலும் பேனாவை கீழே வைப்பதற்கு மறுத்தவர். அவர்தான் நடேசன். “நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடுபட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என்பது நடேசனின் வாசகங்கள். அந்த வாசகம் பகிடியாகக் கூறப்பட்டதல்ல என்பதே தனது மரணத்தின் மூலம் பதிவு செய்தவர் நடேசன். நடேசனின் இன்னுமொரு பகிடிக் கதையும் நிதர்சனமாகியது இங்கு பதிவு செய்வது பொருந்தும்.

“பத்திரிகையாளன் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மரணித்தால் அது செய்தியாக ஒரு கிழமை உலாவரும். பிறகு மறந்து விடுவார்கள். மறந்து விடுவது என்பது மரணித்த பத்திரிகையாளனை மாத்திரமல்ல. அவர்களது குடும்பத்தையும் தான். மரணித்த பத்திரிகையாளன் இல்லாது அவனது குடும்பம் சோகத்தில் இருந்து மாத்திரமல்ல பொருளாதார ரீதியிலும் மீள முடியாத நிலையை. அடைந்து விடும்.” இது பற்றி எவருமே கவலைப்படுவதில்லை என்பது தான் நடேசனின் ஆதங்கமாகிறது. இது நிதர்சனமானது என்பது தமிழ் பத்திரிகை உலகிற்கு நன்றாகவே தெரியும்.

மறைந்த மூத்த பத்திரிகையாளன் எஸ்.நடராஜா தமிழ் பத்திரிகை உலகம் குறித்து அடிக்கடி கூறும் வாசகம் இது “நாங்களெல்லாம் கூலிகள். கூலிகளாகவே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கணிக்கப்படுகின்றார்கள்” என்பதுதான் அவரது கூற்றின் அர்த்தம்.

தமிழ்த் தேசியத்திற்காக எழுதியவர்களையும் உழைத்தவர்களையும் வைத்து வியாபாரம் நடத்திய பத்திரிகை உலகத்திற்கு அதற்காக உயிர் நீத்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட மனமில்லை.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் சுகிர்தராஜ் சுப்பிரமணியம். சிலுசிலுப்பில்லாத, பகட்டான பாத்திரத்தை ஏற்காத அதே வேளையில் அமைதியாக இருந்து தமிழ் மக்களின் உண்மைக் குரலாகச் செயற்பட்டவர் இவர்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் உயிர் இழப்பிற்கு அவர்களே காரணம் என அன்றைய அரச தரப்பும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பிரச்சாரப்படுத்திக் கொண்டிருக்க உண்மையிலேயே அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில்தான் இறந்தார்கள் என்ற உண்மையை வெளிக் கொண்டு வந்தவர் சுகிர்தராஜ் சுப்ரமணியம். இந்த உண்மைக்குச் சாட்சியான சுகிர்தராஜூம் உயிர் பறிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டார்.

நிமலராஜன் யாழ் நிலைமையை வெளிக் கொணர்ந்தார் என்பதற்காக மண்டையில் போடப்பட்டு மௌனமாக்கப்பட்டார்.

இந்தக் கொலைகள் எல்லாமே உண்மை ஊமையாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் றிச்சட் டி சொய்சா, தேவிஸ் குருகேயிலிருந்து பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

•1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி றிச்சட் டி சொய்சா சித்திரவதை செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•பிரபல வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா கொல்லப்பட்டார்.

•1999ம் ஆண்டு செப்டம்பர் 07ம் திகதி சட்டன ஆசிரியர் ரோகண குமார கொலை செய்யப்பட்டார்.

•1999ம் ஆண்டு நவம்பர் 02ம் திகதி நடராஜா அற்புதராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து மயில்வாகனம் நிமலராஜன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

•2004ம் ஆண்டு மே 31ல் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2004 ம் ஆண்டு பாலநடராஜ ஐயர் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பிரபல பத்திரிகையாளர் தராக்கி என அழைக்கப்படும் தர்மரெட்ணம் சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

•2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி தமிழ் வானொலி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2006ம் ஆண்டு ஜூலை 02ம் திகதி தெஹிவளையில் வைத்து சம்பத் லக்மல் டி சில்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி சுப்ரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2006ம் ஆண்டு மே 02ம் திகதி யாழ் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றிய சுரேஷ்குமார் மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

•2006ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் திகதி நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் சின்னத்தம்பி சிவ மகாராஜா யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2006ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி நிலம் சஞ்சிகையின் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகரன் வவுனியாவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2007ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி செல்வராஜா ரஜிவர்மன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2007ம் ஆண்டு ஆகஸ்ட் 01ம் திகதி சகாதேவன் நிலக்சன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2008ம் ஆண்டு மே 28ம் திகதி பரநிரூபசிங்கம் தேவகுமாரன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•2009ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாகப் பல ஊடகத்துறையினர் இனந்தெரியாதோர் என்ற கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டனர்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய இவ்வேளையில் ஊடகத்துறையில் உயிரிழந்த அனைத்து ஊடகத்துறையினருக்கும் வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவது எமது கடமையாகும்.

இலங்கையில் ஊடகத்துறை தொடர்ந்தும் பிளவுபட்டு இருக்காது அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.

உயிரிழந்த ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டாக வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உயிரிழந்த ஊடகத்துறையினரின் குடும்பங்களின் நலன் காக்க நிதியமும் திட்டங்களும் முன்வைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article