Thursday, April 18, 2024

வடக்கு – தெற்கு ஊடக நட்புறவை அரசின் நல்லெண்ணம் கட்டியெழுப்புமா?

Must read

Peace journey to Jaffnaஊடகத்துறைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த வடபகுதி ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் ஊடகத்துறையை அடக்கியாளும் வகையில் செயற்பட்டிருந்தது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறி வரும் நிலையில் யுத்தத்தால் உயிரிழந்த வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் நாட்டு நடப்புகளையும் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அர்ப்பணிப்பு நிறைந்த துறையான ஊடகத்துறையில் பணியாற்றி உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாகவே இத்தூபி அமைக்கப்பட்டது. கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் என்றாலே என்ன நடக்குமோ என்ற நிலை மாறி உயிரிழந்தவர்களுக்கு தூபியை அமைப்பதற்கான காலம் ஏற்பட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் ஒருவரே இதனைத் திறந்து வைப்பதற்கும் முடிந்துள்ளது. இருந்தாலும் இவ்வாறானதொரு தூபியை அமைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தமை வெளித்தெரியாத பக்கமாகும்.

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இத்தூபியை அமைப்பதற்கு இடம் கோரப்பட்ட நிலையில் மாநாகரசபையோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது மாகாண சபையோ அதற்கான அனுமதியை வழங்குவதில் காலத்தை இழுத்தடித்தன. உரிய இடத்துக்கான அனுமதியை வழங்குவதற்கு ஒவ்வொரு காரணங்களைக் காண்பித்து வடமாகாணசபை இழுத்தடித்தது.

சமூகத்துக்காக உயிர்த் தியாகம் செய்த ஊடகப் போராளிகளுக்கு நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்குவதில் வடபகுதியைச் சேர்ந்த அதிகாரிகளே தடையாக நிற்பது ஊடகவியலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் மத்திய அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு உயர்மட்டத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே குறித்த பகுதியில் நினைவுத் தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு தடைகளையும் தாண்டி அமைக்கப்பட்ட தூபியை அமைச்சர் கயந்த கருணாதிலகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்குச் சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக முதலமைச்சரையும் அழைத்து வந்து நினைவுத் தூபியைத் திறந்து வைத்தார்.

வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த 26ஆம் திகதியே வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் தான் ஒதுக்கியிருந்த நேரத்தில் அமைச்சர் சந்திக்கவில்லையெனக் கூறி அன்றைய தினம் முதலமைச்சர் சந்திக்கவில்லை. மறுநாளான 27ஆம் திகதி மாலை நினைவுத் தூபியைத் திறப்பதற்கு தயாராகவிருந்த அமைச்சர், முதலமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கிடைத்தவுடன் உடனடியாகச் சென்று சந்தித்தார். இச்சந்திப்பை முடித்து முதலமைச்சரையும் அழைத்து வந்து தூபியைத் திறந்து வைத்தார்.

அமைச்சருடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெயிட்டிருந்த வடமாகாண முதலமைச்சர், அரசியல் ரீதியான தீர்வை எட்டாத நிலையில் சமாதானத்தையும் நல்லெணத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கை எந்தவித பலனையும் தராது எனக் கூறியிருந்தார். ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தன்னிடம் சுட்டிக் காட்டியிருந்ததாகவும், இது தொடர்பான விபரங்களை அனுப்புமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை குறித்து நடத்தும் விசாரணைகள் சர்வதேச ஊடக அமைப்புக்களின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்தமான வடபகுதி ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகும். அவ்வாறான விசாரணையொன்றின் மூலமே நம்பகத் தன்மையை உறுதி செய்ய முடியும் என்பது வடபகுதி ஊடகவியலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

நீண்ட கால அச்ச சூழலில் ஊடகத் தொழிலை செய்த வடபகுதி ஊடகவியலாளர்கள் மத்தியில் ஓரளவு பயத்தைக் குறைக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருப்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவின் வடக்கு விஜயம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது என்றே கூற வேண்டும். இருந்தாலும் அமைச்சர் தலைமையில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் யாழ் குடாநாட்டுக்கான முப்படைத் தளபதிகளுடன் நடத்திய கலந்துரையாடல்களில், இராணுவப் பிரசன்னம் தொடர்பில் கூறப்பட்ட கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.

கடந்த காலத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் எட்டாப் பொருத்தமாக இருந்தது. இருந்தாலும், கடந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களை நடத்திய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதிய அரசாங்கம் நோக்குகிறது என்பது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது. எனினும் இந்த நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஊடகத்துறையை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு வழிவகுக்குமா என்பது எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் தென்பகுதியிலிருந்து ஊடகவியலாளர்களை வடக்கிற்கு அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் ஊடகவியலாளர்கள் மத்தியில் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நல்லிணக்க முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் மொழி கருத்துப் பரிமாற்றத்துக்கான தடையாக இருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. வடபகுதியில் உள்ள ஊடகவியலாளர்களும், தென்பகுதியில் உள்ள ஊடகவியலாளர்களும் ஒருவருடன் ஒருவர் சந்தேகம் இன்றிப் பழகுவதற்கு பரஸ்பரம் இரு மொழிகளையும் அறிந்து வைத்திருப்பது பயனளிக்கும்.

அவ்வாறு செய்வதன் மூலமே வடபகுதி தொடர்பான உண்மை நிலைமையை தென்பகுதி ஊடகவியலாளர்களும், தென்பகுதி தொடர்பான நிலைமைய வடபகுதி ஊடகவியலாளர்களும் அறிந்துகொள்ள முடியும். ஊடகத்துறைக்கு எந்தப் பகுதியிலும் ஒரே மாதிரியான சவால்கள்தான் காணப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பிலும் ஊடகத்துறை அமைச்சு எதிர்வரும் காலங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்.

Peace journey to Jaffna journalist

  • Thanks Thinakaran.lk-
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article